சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு
Share
கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மார்ச் 10ஆம் திகதி முதல் சாரதி அனுமதிப் பத்திரம் காலாவதியாகும் சாரதிகள், அதனை புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 15ஆம் திகதிவரை முன்னர் வழங்கப்பட்டது.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த அரசு முன்னெடுத் துள்ள ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நேற்று வரை தளர்த்தப்படவில்லை.
அதனால் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அலுவலகம் செயற்படவில்லை.
அதுதொடர்பில் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் குறித்து அமைச்சர் அமரவீர நேற்று கோவிட் – 19 தொற்று நோய் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தொற்று நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நாட்டின் அனைத்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உரிய திகதியை தற்போது வழங்க முடியாது என்று சுகாதார அதிகாரிகள், அமைச்சரிடம் சுட்டிக் காட்டினர்.
எனவே கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுக்கு, அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கினார்.
இதுதொடர்பில் பொலிஸார் உட்பட பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவிக்குமாறும் அவர் அதிகாரிகளைப் பணித்தார்.
கொரோனா தொற்றுநோயுடன் மோட்டார் போக்குவரத்துத் துறையின் தினசரி இழப்பு சுமார் 3 மில்லியன் ரூபாய் என்று கூட்டத்தில் தெரியவந்தது.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து தலைமை அலுவலகத்தை வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை திறக்குமாறும் ஏனைய மாவட்ட அலுவலகங்களை 20ஆம் திகதிக்குப் பின்னர் திறக்குமாறும் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தல் வழங்கினார்.