முள்ளிவாய்க்கால் கஞ்சி
Share
உயிர்காத்த உணவு வலிசுமந்த நினைவாக்கப்பட்டது
மே-18 தமிழினத்தின் வலிசுமந்த நாள். எம் இனத்தை ஒட்டுமொத்தமாய் அழித்தொழித்து வென்றுவிட்டோம் என்று பெரும்பான்மை ஆட்சியாளர்கள் கொக்கரித்த நாள்.
என்று இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததோ அன்றிலிருந்து இன அழிப்பு ஆரம்பமாகிவிட்டது. காலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு தமிழினத்தின் சுதந்திரத்தைப் பறித்த வரலாற்றை தமிழினம் என்றும் மறவாது.
அன்று தொட்ட நாசம் இன்று வரை தமிழினத்தை நிம்மதியாய் வாழ்வதற்கு பெரும்பான்மை ஆட்சியாளர்கள் விடவுமில்லை. விரும்பவுமில்லை. இந்த நாட்டின் சிறுபான்மையினர்; பூர்வீகக் குடிகள் என்பதைத் தாண்டி வேறு எந்தத் தவறையும் தமிழினம் செய்யவில்லை.
இந்த நிலம் சிங்கள பௌத்தத்திற்குரியது என்ற இனத்துவேச ஆட்சியாளர்களின் வருகை தமிழினத்தின் தாயகத்தை கூறுபோட்டது என்பதே மெய்.
சிங்கள தேச எல்லைகளை விரிவுபடுத்துவதாய் தமிழினத்தின் பூர்வீக நிலங்களை அபகரிப்பது எவ்வளவு அபத்தமானது.
ஆயினும் அந்த அபத்தத்தை சிங்கள தலைவர்கள் வாழையடி வாழையாகச் செய்து கொண்டேயிருந்தனர்.
தமிழர் தாயகத்தை சிங்கள தேசமாக்குவதை நிறுத்துங்கள் என்ற குரல்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் கொடுத்த பெயர் பயங்கரவாதம்.
அன்று தொடங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான வேட்டை மே-18, முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்றது.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது என்ற வெற்றி வார்த்தைக்குள் தமிழினத்தின் தாழாத் துயரமும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களின் பலியெடுப்பும் இருந்தது என்பதை ஏனோ சிங்கள ஆட்சியாளர்கள் மறந்து போயினர்.
வன்னிப் போர் உச்சம். ஒருபக்கம் குண்டு மழையில் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
மறுபக்கம் பசி – பட்டினி தலை விரித்தாடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எஞ்சியிருந்த எம்மினத்தின் பசி போக்கியது கஞ்சி.
கஞ்சியெனின் தேங்காய்ப்பால் இருக்கும். உப்பு இருக்கும். அப்போதுதான் அதில் சுவையிருக்கும்.
ஆயினும் முள்ளிவாய்க்காலில் அப்படிப்பட்ட கஞ்சி பரிமாறப்படவில்லை. கடல்நீரில் அரிசியை இட்டு கொதிக்க வைக்கப்பட்ட உயிர்காக்கும் நீராகாரம் அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி.
ஒரு இனத்தின் உயிர்காத்த உணவு அந்த இனத்தின் வலிசுமந்த நினைவாக்கப்பட்டது உண்மையில் மெச்சத்தக்கது.
அண்மையில் யாழ். பல்கலைக்கழகப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் வாங்கிய 15 வயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தி அதை ஒரு மிரடு குடித்துவிட்டு தந்தையிடம், “அப்பா இதில் உப்பு மில்லை, புளியுமில்லை. எந்தச் சுவையுமில்லை.
ஏன் இதை மக்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றாள்.
அதற்கு அந்தத் தந்தை கூறுகிறார். “இந்தக் கஞ்சியில் சுவையில்லைத்தான். ஆனால் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தக்களத்தில் எம் தமிழ் இனத்தின் உயிர்காத்த உயிர் பானம் இது என்றார்.
அந்தச் சிறுமி அடுத்த பேச்சின்றி மொத்தக் கஞ்சியையும் ஒரே மிரடில் குடித்துவிட்டு அங்கு கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாதாகையினை வணங்கிச் சென்றாள்.
அப்போது எனக்குள் ஒரு பூரிப்பு. எம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியவை நிறைய இருக்கின்றன.
எமது வலிசுமந்த வாழ்வையும், எம் இழப்புக்களையும் கட்டுரையாய் வடித்து புத்தகக்
கட்டுக்குள் முடக்குவதிலும் இவ்வாறான செயற்பாடுகளினூடே இலகுவாகப் புகுத்திவிடலாம் என்று.
மே மாதம் தமிழினத்தின் உணர்வுபூர்வமான இந்த மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சிமிகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.
ஆம், திராவிட ஊழல் பெருட்சாளிகளின் கைகளுக்குள் சிக்கியிருந்த தமிழகம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
அவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் இப்போது முதல்வர் விஜய் என்ற ஒப்பற்ற உச்சத்தில் இருக்கும் நிலையில், அவர் ஈழத்தமிழினத்துக்கு என்ன சொல்லப் போகி றார், செய்யப் போகிறார் எனும் கேள்விகள் அனைவரிடத்திலும் எழ ஆரம்பித்துள்ளது.
விஜய், எம்.ஜி.ஆர் பாணியைப் பின்பற்றுகிறார் என பலர் பல்வேறாகப் பேசி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் ஈழத்தமிழினத்தின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். அவரின் வழியைப் பின்பற்றும் விஜய்யும் ஈழத்தமிழினத்தின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டங்களைத் தாண்டி தமிழக அரசினால் ஈழத்திற்கு எதை யும் செய்ய இயலாது. ஆயினும் வலிசுமந்த மே-18இல் விஜய் தலைமையிலான அரசு ஈழத்தமிழினம் சார்ந்து தீர்மானங்களை நிறைவேற்றுமாக இருந்தால், அது நிச்சயம் சர்வதேச அளவில் அழுத்தங்களைக் கொடுக்கும்.
விஜய் ஆட்சியமைக்க ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கிய நிலையில், விஜய் ஈழத்தமிழினத்தின் வலிகளை பேசுவாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழாமலில்லை.
ஏனெனில் 2009ஆம் ஆண்டு வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஈழத் தமிழினம் கொத்துக் கொத்தாய் கொன்றொழிக்கப்பட, அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு இலங்கைக்கு ஆதரவளித்ததான வரலாறுகளை நாம் மறந்துவிட முடியாது.
ஆக, இற்றைக்கு 17 வருடங்கள் கடந்த நிலையிலும் ஈழத் தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கான நீதி கிடைக்க வில்லை.
இலங்கை ஆட்சியாளர்கள் தமிழினத்துக்கான நீதியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை துளியளவுமில்லாத தமிழினத்துக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டியது சர்வதேசம் மாத்திரமே.
அபிமன்யு.


