தரிசனம்
Share
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 1
அன்பு வாசகர்களுக்கு வணக்கம். ‘தரிசனம்’ திறனாய்வு செய்கின்ற ஒரு களம். இங்கு யாரையும் நோகடிப்பது எமது நோக்கமன்று.
மற்றவர்களை நோகடித்து சமூக முன்னேற்றத்தை ஒரு போதும் ஏற்படுத்தி விட முடியாதென்பதில் நாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தவிர, மற்றவர்களுடைய மனங்களை நோகடிப்பதென்பது கூட ஒரு வகையான வக்கிர உணர்வாகவே கருதப்பட வேண்டும்.
ஆக, எதையும் நேர்மையாக-பண்போடு தெரியப்படுத்துவதுதான் ஊடக ங்களின் தர்மமாக இருக்கும்.
அந்த வகையில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை எமது முதலாவது தரிசனமாகியது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் தரிசனம் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகமே பதிலளிக்க வேண்டும் என்பதோடு தரிசனம் குறித்த முன்னுரையை நிறைவு செய்து கொள்ளலாம்.
ஆயினும் தரிசனத்தில் இடம்பெறுகின்ற கருத்துக்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தமது கருத்தைப் பதிவு செய்ய விரும்பினால், அதற்குத் தரிசனம் உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்பதையும் இந்த இடத்தில் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனி இரண்டாவது தரி சனத்திற்கான திரை விலகுகிறது.
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்பது இரண்டாவது தரிசனத்தி ற்கான பிரசாதம்.
ஏலவே இரண்டாவது தரிசனம், இந்து ஆலயங் களும் அவற்றின் பரிபாலனமும் என விளம்பரப்படுத்தியதில் இருந்து தரிசனம் எப்போது வெளிவரும் எனப்பலரும் கேட்டுக் கொண்டனர்.
இவ்வாறு பலரும் ஆவல்படுவதற்குள் நாம் எடுத்துக் கொண்ட தரிசனப் பொருள் காலத்தின் தேவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
நல்லது. இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற தரிசனம் பல்வேறு விடயங்களைச் சுட்டி நிற்கும்.
சிலவேளைகளில் அந்த விடயங்களில் சிலர் மனக்கிலேசமடையலாம். அவ்வாறு யாரேனும் மனக்கிலேசமடை ந்தால், அஃது அவர்களின் தவறேயன்றி மற்றும்படி அது நம் தவறன்று.
ஆம், இந்து ஆலயங்கள் வரலாற்றுத் தொன்மை மிக்கவை. நம் ஈழத்திருநாடு சிவபூமியெனப் போற்றப்படுவது. திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் கோவிலை இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் கட்டு வித்தான் எனத் தலபுராணம் கூறுகிறது.
இதை நாம் கூறுவதற்குக் காரணம் இலங்கையில் சைவ சமயம் எத்தனை தொன்மை யானதென்பதை காட்டுவதற்கேயாம்.
உண்மை. இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள். தமிழர் என்றதும் அவர்களின் தாய்ச் சமயமாகிய சைவமும் அங்கு தமிழோடு உற்பவமாகிவிடும்.
இதை உறுதி செய்வது போல, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளு மன்ற உறுப்பினராகப் பதவியேற்று சபாநாயகருக்கு வாழ்த்துத் தெரிவித்த போது; இந்த நாட்டின் ஆதிகுடியாகிய தமிழ் மக்களின் தாய்மொழியாம் தமிழால் உங்களை வாழ்த்துகிறேன் எனக் கூறினார்.
அவர் அவ்வாறு கூறியதும் இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர் என்பதை கன்சாட்டில் இருந்து நீக்க வேண்டுமென சிங்களப் பேரினவாதப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூக்குரலிட்டனர்.
இருந்தும் அதனை நீக்காமல் அப்படியே கன்சாட்டில் வெளிவர சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்குள் இந்த நாட்டின் ஆதிக்குடி தமிழர்கள் என்பது நிரூபணமாகிறது.
இங்குதான் ஒரு விடயத்தை நாம் கவனித்தாக வேண்டும். அதாவது, இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தமிழர்கள். அவர்களின் தாய்மொழியாம் தமிழால் சபாநாயகரை வாழ்த்துகிறேன் எனக்கூறி, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதன்மைக்குரிய உரைகளில் உச்சம் தொட்ட உரையை ஆற்றிய நீதியரசர் சி.வி.விக் னேஸ்வரன் பின்னாளில் எப்படியாகத் தன்னிலை இழந்தார் என்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
இதை நாம் கூறுவது சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைச் சுட்டிக்காட்டுவதற்காக அல்ல.
மாறாக, எங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைமை இப்படியாகத்தான் இருக்கி றது என்பதை வெளிப்படுத்தவேயாம்.
உண்மை. தொடக்கத்தில் உச்சமாகக் கதைத்து, பின்னர் தங்களையே இழந்து போகுமளவில் தமிழ் அரசியல்வாதிகளின் உரைகளும் கதைகளும் காரியங்களும் ஆகிவிடுகின்றன.
இது அவர்களின் பிழையா? அல்லது நம் தமிழினத்தின் ஊழ்வினையா? என்பது தெரியவில்லை.
இஃது ஒருபுறமிருக்க, இப்போது நம் மண்ணில் சைவசமயம்-இந்து சமயம் எனப் பேதமைப்படுத்தி அதைக் கூறுபோடுகின்ற காரியங்களும் நடந்தாகின்றன.
எதுவாயினும் எம்மைப் பொறுத்தவரை சைவம்-இந்து என்ற வகைமைப்பாடு தேவையற்றது. அதை தேவையென யார் கூறினாலும் அது சைவ சமயத்திற்கே பாதிப்பாகும் என்பது நம் தாழ்மையான கருத்து.
ஆம், ஒரு காலத்தில் வித்துவான் சொக்கன், பன்மொழிப் புலவர் க.சி குலரத்தினம் போன்றவர்கள் இந்து என்றே சைவ சமயத்தையும் முன்மொழிந்தனர். அதாவது, அவர்கள் சைவம் வேறு இந்து வேறு என ஒருபோதும் பிரிவினை செய்யவில்லை.
தொடரும்…


