வியாசர் பதில்கள்
Share
ஈழத்து போர்க்குற்றவாளிகளை ஒதுக்கி வைத்தது போல அமெரிக்க அதிபரை உலகம் ஒதுக்கி வைக்குமா வியாசரே?
சுதன்-குப்பிழான்
இப்போது அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆம், கடந்த வாரம் பிரிட்டிஸ் பிரதமர், ஈரானுடனான போர் அமெரிக்காவுக்கு மட்டுமானதே. அது அனைவருக்குமான போர் அல்ல எனத் தெரிவித்திருப்பது சர்வ சாதாரண மான விடயம் இல்லை.போகிற போக்கைப் பார்த்தால் அமெரிக்கா தனித்து விடப்படும் நிலை ஏற்படும் போலத் தெரிகிறது. ஏனெனில் ட்ரம்பிற்கு எதிரான போர்
அமெரிக்காவிலும் களை கட்டத் தொடங்கி விட்டது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமிழ் அரசியல்வாதிகளின் அமளிதுமளிகள் பற்றி?
சாயிசெல்வம்-பருத்தித்துறை
“நாகபாம்பு இல்லாத ஊரில் நாக்கிளிப் புழு படமெடுத்து ஆடியதாம்” என்றொரு சொல்லாடல் உண்டு. இப்போது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் சிலரின் அட்டகாசங்களைப் பார்க்கும் போது இதுவே நினைவுக்கு வருகிறது.
ஏதோ தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பும் ஏச்சும் என்பது அறிவில்லை, அறியாமை என்றே பொருள்.
இவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் கமராவும் கையுமாகத் திரிகிறதே அவர்களை வெழுக்க எல்லாம் சரிவரும்.

கிட்ட இருப்பதை பிடிப்பதை விட்டு விட்டு எட்டப் பறப்பதை பிடிக்க நினைப்பது…?
மகாலட்சுமி-உரும்பிராய்
கால் இல்லாத ஒருவர் நடந்து செல்பவரைப் பார்த்து அவரைப் போல எனக்கும் கால் இருந்தால்…
நடந்து போகிறவர் சைக்கிளில் செல்பவரைப் பார்த்து அவரைப் போல என்னிடமும் சைக்கிள் இருந்தால்…
சைக்கிளில் செல்பவர் மோட்டார் சைக்கிளில் செல்பவரைப் பார்த்து என்னிடமும் மோட்டார் சைக்கிள் இருந்தால்..
மோட்டார் சைக்கிளில் செல்பவர் காரில் செல்பவரைப் பார்த்து என்னிடமும் கார் இருந்தால்…
இந்த உலகில் எவரும் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பது கிடையாது.
இருப்பதற்கு சிறு இடம் கிடைத்ததும் பறப்பதற்கு ஆசைப்படும் மகா கெட்ட சமூகம் எம் சமூகம்.

அரசாங்க வேலைக்கு போட்டிப் பரீட்சை வைப்பது போல அரசியலில் ஈடுபடுபவர் களுக்கு போட்டிப் பரீட்சை வைத்து அதில் சித்தியடைபவர்களை மக்கள் வாக்கெடுப்பிற்கு விடலாமே?
ஸ்ரீசிவன்-கோண்டாவில்
ஆமையைப் பிடிப்பார் மல்லத்துவர் யாம் அது சொன்னால் பாவம் என்பதே எமது இப்போதைய நிலை.
அரச வேலைக்கு தகுதி, அறிவு தேவை எனின் மக்கள் பிரதிநிதி என்ற உச்ச அந்தஸ்து க்கும் அது தேவை என்பது நியாயமான கோரிக்கை தானே.
இதைக் கேள்விப்பட்டாலே பலர் போர்க்கொடியுடன் எம் வாசல் வந்து நின்று விடுவார்கள்.
தம்பி, இந்தக் கேள்வியை ஜனாதிபதிச் செயலகத்திற்கு அனுப்பி வையுங்களேன்.

தமிழ் தேசியம் என மூச்சுக்கு முந்நூறு தரம் கூறும் தமிழர்கள் சீமானை ஆதரிக்காதது ஏன் வியாசரே?
ஜெ.ஜெ-யாழ்ப்பாணம்
இவர்கள் சீமானை ஆதரிக்கவில்லை என்பதிலும் சீமான் இவர்களை ஏற்கவில்லை என்பது தான் சரியானது.
எம்மவர்களுக்கு தமிழ்த் தேசியத்தை வைத்துப் பிழைப்பு நடத்தவே தெரியும்.
அதை வேறு எவரும் கையில் எடுத்தால் பிடிக்காது. ஏனென்றால் தங்கள் பயறு மக்கள் மத்தியில் அவியாமல் போய்விடும் என்ற அச்சம்.
சீமானின் தமிழ்த்தேசிய அரசியல் தனிப்பட்ட ரீதியில் எனக்கு மிகவும் பிடிக்கும் அவ்வளவே.

அகலக் கால் வைக்கும் அமெரிக்காவின் திட்டம் பலவீனமாகி விட்டதே?
செல்வராஜ்-வதிரி
பலம் என்பது சண்டையிடுவதில் இல்லை. அது எமது நடத்தைக் கோலங்களில் நாம் பலசாலி என்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர, நான் பலசாலி என்று விட்டு யாரிடமும் சண்டைக்குப் போனால் நாமே மொக்ஹிகனப்பட வேண்டி வரும்.
இப்போது அமெரிக்காவின் நிலையும் அது தான். தன்னைவிட யாரும் இல்லை என்ற பிம்பத்துடன் இருக்காமல் ஈரானில் இறங்கி இறுதியில் மூக்குடைப்பட்டது அமெரிக்காவே.

நான் வாழ்வில் முன்னேற வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் வியாசரே?
தேஜாத்-மந்துவில்
நிலவைப் பார்த்து நாய் குரைக்கும் கதை உமக்குத் தெரியுமா தம்பி.
நிலவிருக்கிறதே அது பல இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் இருந்து பூமிக்கு ஒளி கொடுக்கிறது.
ஆனால் இந்த நாய் இருக்கிறதே அதற்கு நிலவைக் கண்டால் பிடிக்காது.
அது நிலவை பார்த்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும். நாயாரே நாயாரே நான் மிகவும் நல்லவன் என்று நிலவு தனது தகுதியை விட்டு இறங்கி, நாய்க்கு பதில் சொல்ல நினைத்தால், நாய் தன்னைப் பெரியவன் என்று நினைத்துத் துள்ளிக் குதிக்கும்.
நிலவுதன் நிலையில் இருந்து இறங்கி வரவே தேவையில்லை. நாய்க் குரைத்துக் குரைத்துக் களைத்து கடைசியில் தொண்டை வீங்கிச் சாகும் நிலைக்கு வந்து விடும்.
என்ன தம்பி புரிகிறதா?

வெய்யிலும் தமிழர்களைச் சுட்டெரிக் கிறதே வியாசரே?
நீதன்-றம்பைக்குளம்
மக்களே அவதானமாக இருங்கள். வெயில் சுட்டெரிக்கிறது என்று கண்ட கண்ட கெமிக்கல் சோடாக்களை வாங்கிக் குடித்து உடம்பைக் கெடுத்து விடாதீர்கள்.
நிறைய நீர், இயற்கை பானங்களை அருந்துங்கள், முக்கியமாக தேசி, தோடை போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
அநாவசியமாக பகல் பொழுதில் வெளியே திரியாதீர்கள். நோயாளிகள் வயது முதிர்ந்தவர்களை இந்த வெய்யில் பெரிதும் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதன்படி நடப்பதே நமக்கும் நமது ஆரோக் கியத்திற்கும் நல்லது.



