Type to search

Articles வியாசர் பதில்கள்

வியாசர் பதில்கள்

Share

1) விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர ஏன் இவ்வளவு இழுத்தடிப்பு?

சங்கீத்-யாழ்ப்பாணம்

விஜயின் அரசியல் பிரவேசம் அசாத்தியமானது. ஆயினும் அவர் காங்கிரசுடன் கூட்டு வைப்பதென்பது தவறான முடிவு.

ஏனெனில் இந்தியாவில் காங்கிரசின் நிலை மிக மோசம். இவற்றிற்கு மேலாக ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலைக்கும் இலட்சக் கணக்கான அப்பாவிகள் இறப்பதற்கும் மூல காரணமானது காங்கிரஸ்.

இவ்வாறான நிலையில் விஜய் காங்கிரசைத் தவிர்த்து வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதே அவரின் பெரும்பாண்மையை நிரூபிக்கும் செயல்.

2) விஜய்க்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டம் பற்றி?

சிவம்-வதிரி

தமிழ் நாட்டு அரசியல் என்பது ஈழத்தமிழினத்துடன் தொடர்புபட்டது.

அதில் என்ன விசேடம் எனின் இம்முறை நடிகர் விஜய் தேர்தல் களத்தில் குதித்தது தான்.

இதுவரை தி.மு.க, அ.தி.மு.க என இரு பெரும் ஊழல் பெருச்சாளிகளுக்குள் சிக்கியிருந்த தமிழ் நாடு இப்போது சற்று வெளியே வந்திருக்கிறது.

விஜய் இரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஆயினும் அவர்கள் பேசும் பேச்சைக் கொஞ்சம் நிதானமாகப் பேச வேண்டும்.

தமிழகத்திற்கு யார் முதல்வராக வந்தாலும் அதனால் ஈழத்தமிழர் பிரச்சினை தீராது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

3) கடையயான்றில் பப்பாசிப்பழம் வாங்கினேன். சிவந்து பழுத்திருந்தது. ஆனால் இனிப்பும் இல்லை. சுவையுமில்லை வியாசரே?

தேகேஸ்-மந்துவில்

என் வீட்டில் ஒரு மாமரம் நிற்கிறது. நன்றாக காய்க்கும். பழமும் நல்ல சுவை.

ஆயினும் நூற்றுக்கு ஐம்பது விகிதம் பழத்தினுள் புழு இருக்கவே செய்தது.

ஆயினும் நாம் எமது வீட்டுத் தேவைக்கு பழங்களை எடுத்துக் கொண்டிருந்தோம்.

ஒரு நாள் வியாபாரி ஒருவர் மாங்காய் விற்பனை செய்வீர்களா என்றார்.

நான் விடயத்தைக் கூறினேன். அதற்கு அவர் சொன்னார், காய் பழுக்க நாம் அடிக்கும் மருந்து பவர் ஆனது.

உள்ளுக்குள் இருக்கும் புழுக்கூட செத்து விடும் என்றார்.

நான் சொன்னேன். நீங்கள் ஒரு சந்ததியையே அழித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்க ளுக்குப் புரியவில்லையா என்று.

4) தமிழகத் தேர்தலில் விஜயின் வெற்றி ஈழத்தமிழ் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

விஜயகுமார்-யாழ்ப்பாணம்

ஒருநாளும் இல்லை. தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா அம்மையார் இருந்த போது வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்தது இன அழிப்பே என்று சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றினார்.

குறித்த தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் தமிழினத்துக்கு பயன் என்னவெனின் ஈழத்தமிழினத்துக்காக தமிழகம் குரல் கொடுக்கிறது என்பது மட்டுமே.

ஈழத்தில் நடந்தது இன அழிப்பே என்பதைத் தாண்டி ஒரு முதல்வரால் வேறு எதைச் செய்து விட முடியும்.

ஆக, விஜய் அல்ல அந்த பரமசிவனே தமிழக முதல்வராய் வந்தாலும் அதைவிட வேறு எதையும் செய்ய முடியாது.

5) தேனிசை செல்லப்பா இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டாரே வியாசரே?

கரன்-மந்துவில்

தேனிசை செல்லப்பாவின் கணீர் குரல் மட்டுமே எமக்குத் தெரியும் அவரின் கொள்கையுறுதி எமக்குத் தெரியாது.

தேனிசை செல்லப்பா தமிழ் தேசியப் பாடகர். அவர் நினைத்திருந்தால் சினிமாப் பாடல்களைப் பாடியிருக்கலாம். அவ்வாறு பாடியிருந்தால் அவர் கோடிக் கணக்கில் சம்பாதித்திருப்பார்.

ஆனாலும் அவர் ஒரு நாளும் தன் கொள்கையிலிருந்து கீழிறங்கியதில்லை.

இந்திய அரசியல் தளத்திலும் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் மேடைகளில் தேசிய எழுச்சிப் பாடல்கள் பாடியிருக்கிறார்.

இறுதியாக நாம் தமிழர் கட்சி மேடைகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.

6) இன்றைய இளைய தலைமுறையினரின் அரசியல் புரிதல் திருப்திகரமானதாக இல்லையே?

ஜெ.ஜெ-யாழ்ப்பாணம்

வாள் வெட்டுக் குழுத் தலைவனை தம் நாயகன் என்ற எண்ணம் கொண்ட எம் இளம் சமூகம் இருக்கும் வரை எமக்கான மாற்றம் எதுவும் இல்லை.

அண்மையில் சமூக ஊடகத்தில் ஒரு காணொளி பார்த்தேன். வாள் வெட்டுக் குழுவுடன் தொடர்புடைய நபர் ஒருவரின் காணொளியது.

அதன் கீழ் பதிவிடப்பட்ட கொமன்ஸ்களைப் பார்க்கும் போது எனக்கு பெரும் திகைப்பு.

அண்ணா, உசிரு, தல, தெய்வம், நீ என் வழிகாட்டி, உன்னை மறக்க முடியாது அண்ணா இவ்வாறு இன்னும் பல ஆயிரக்கணக்கான பதிவுகள்.

எம் இளம் சமூகத்தை வழிப்படுத்த தவறியவர்கள் நாம் தான். அதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7) தனக்குக் கிடைத்த தோல்வி தமிழ் மக் களுக்குக் கிடைத்த தோல்வி என்கிறாரே சீமான்?

சேந்தன்-மானிப்பாய்

உ ண்மை. சீமானின் கொள்கைகள் உன்னதமானவை. அவர் நினைத்திருந்தால் வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கலாம்.

ஆனாலும் தன் கொள்கைக்கு மாற்றுக் கொள்கையுடைய எவருடனும் சேரமாட்டேன்.

வெற்றியோ, தோல்வியோ தணித்தே நிற்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சீமான் முதலமைச்சராவது கடினமாயினும் சீமான் சட்டமன்றத்தில் தமிழரின் குரலாக ஒலித் திருப்பார். அதற்காகவேனும் சீமான் வென்றிருக்க வேண்டும்.

8) கற்பெனப்படுவது யாது வியாசரே?

சண்முகம்-நெல்லியடி

இலங்கை வேந்தன் இராவணன் சீதாதேவி மீது ஆசை கொண்டு அவளைக் கவர்ந்து, சிறைப் பிடித்து வைத்திருக்கிறான்.

இராம பக்தன் ஹனுமான் சீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுகிறான்.

அப்போது சீதை நினைத்திருந்தால் ஹனுமானின் தோளில் ஏறி தப்பித்திருக்கலாம்.

ஹனுமானும் ஒரு தாவலில் சீதையை இராமனிடம் சேர்த்திருப்பான்.

சீதை கூறுகிறாள் என்னைக் கவர்ந்து வந்தவனிடமிருந்து என்னை மீட்க வேண்டியது என் நாதனாகவே இருக்க வேண்டும்.

அதுவே அவருக்கும் என் கற்புக்கும் பெருமை என்று.

இந்த ஒற்றை வார்த்தையே மிகப் பெரிய இராமாயண காவியமாக உயர்ந்து நிற்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link