Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

ஞானியார் நிலை

ஒரு குரு இருந்தார்! ஜென் குரு!

அவரிடம் ஒரு பழக்கம். வேறு என்ன.. அப்பப்ப கொஞ்சம் திருடுவார். அவ்வளவு தான்! பெரிதாக ஒன்றும் திருட மாட்டார்.! அவர் ஈடுபடுவது எல்லாம் சின்னச் சின்ன திருட்டு தான்!

அடுத்தவர்களுக்குச் சொந்தமான சின்னச் சின்னப் பொருட்களை திருட வேண்டியது – மாட்டிக்க வேண்டியது சிறைக்குப் போக வேண்டியது விடுதலையானதற்குப் பின்பு மறுபடியும் திருட்டு.. இதுவே பழக்கமாகப் போய்விட்டது அவருக்கு!

அவருடைய சீடர்களுக்கு இது ஒரு பெரிய புதிர். நமது குரு ஒரு பெரிய ஞானி.

அவர் இப்படி செய்கின்றாரே என்று நினைக்கின்ற போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஏன் இப்படி செய்கிறார் என்று ஒன்றும் புரியவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள். ஒரு நாள் கேட்டே விட்டார்கள்.

“ஏன் சுவாமி இப்படி செய்கின்றீர்கள்? செருப்பைக் கூட திருட வேண்டுமா நீங்கள்?

உங்களுக்கு என்ன தேவை என்பதை எங்களிடம் சொன்னால் ஒரு செருப்பு கடையை வாங்கி வந்து குவித்து விட மாட்டோமா? ஏன் இப்படி செய்கின்றீர்கள்? என்ன ஆகி விட்டது உங்களுக்கு?” அப்படி என்று கேட்டார்கள்.

அதற்கும் ஒரு சிரிப்புத் தான்! சிரித்துக் கொண்டே பேசாமல் போய் விட்டார் குரு!

அதற்குப் பின்பு அவர் வழக்கத்தை நிறுத்தவில்லை. திருடுவது – மாட்டிக் கொள்ளுவது – ஜெயிலுக்குப் போறது! சீடர்கள் கேட்டால் சிரித்துக் கொண்டே போய் விடுவது! இப்படி அவருடைய காலம் ஓடிப் போய் விட்டது! கடைசியிலே ஒரு நாள் அவர் மரணப்படுக்கையிலே கிடக்கின்றார். பக்கத்திலே அவர் சீடர்கள் எல்லாம் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்!

இப்போதாவது நமது குரு உண்மையைச் சொல்ல மாட்டாரா? அப்படி என்று நினைத்துக் கொண்டு அந்தப் பழைய கேள்வியையே திரும்பவும் கேட்டார்கள்.

“சுவாமி! இப்போதாவது சொல்லுங்களேன்! நீங்கள் அடிக்கடி திருடிக் கொண்டு ஏன் ஜெயிலுக்குப் போகின்றீர்கள்! அந்த செயலுக்கு என்ன காரணம்? அதில் உள்ள மர்மம் என்ன?” – அப்படி என்று கேட்டார்கள்.

“அதில் பெரிய இரகசியம் ஒன்றும் இல்லை. சாதாரண விடயம் தான்!” அப்படி என்றார் குரு.

இவர்களுக்கு இன்னமும் ஆச்சரியம்! ‘என்னது.. சாதாரண விடயமா…?” அப்படி நினைத்து குழம்பிப் போய் நின்றார்கள்.

இப்போது அந்த குரு சொல்கிறார்.

“வேறு ஒன்றுமில்லையப்பா… நான் அடிக்கடி சிறைக்குள்ளே போக வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதனாலே தான் திருடினேன். உள்ளே இருக்கின்றவர்களை சந்தித்துப் பேசி. அவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதற்கு இதை விட சிறந்த வழி வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை! அதனாலே தான் சின்னச் சின்ன திருட்டுகள் செய்தேன்.

என்னுடைய பயம் எல்லாம் என்னவென்றால் ‘எங்கே மாட்டிக்கொள்ளாமல் போய் விடுவோமோ?” என்பது தான்! மாட்டிக்கொண்டால் தானே உள்ளே போக முடியும்!

எனக்குத் தண்டனை கொடுக்கின்ற நீதிபதியும் ரொம்ப நல்லவர்…ஒவ்வொரு தடவையும் ஆறு மாதத்துக்குக் குறையாமல் தண்டனை கொடுத்து விடுவார்.

உள்ளே எனக்கு ஒரே சந்தோஷம் தான். நிறைய பேர் திருந்தி வெளியே வருவதற்கு நான் உதவி செய்திருக்கின்றேன்!” அப்படி என்றார்.

உண்மையான ஞானிக்கு அரண்மனையும் ஒன்று தான் சிறைச்சாலையும் ஒன்று தான் அப்படி என்பதை தன்னுடைய வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டினவர் அந்தக் குரு!

நம்ம ஆளு ஒருத்தன்.

“அவனும் கொஞ்சம் வித்தியாசமான ஆள் தான்! அடிக்கடி திருடுவான் – மாட்டிக்கொள்ளுவான் – ஜெயிலுக்குப் போவான் என்னப்பா இப்படி செய்கிறாயே என்று கேட்டேன் “

“ஜெயில் என்பது எனக்கு மாமனார் வீடு மாதிரி சார்” அப்படி என்று சொல்லுவான.;

நிஜமாகவா அப்படிச் சொல்லுகிறாய் என்று கேட்டால், ஆமாம் சார்… என்னுடைய மாமனாரும் அங்கே தான் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார்!” அப்படி என்றான்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link