ஆலடி மாநாடு
Share
நயினாதீவு நாகபூசணித் தாயாரின் காணிக்கைப்பணம் களவு போவதோ!
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர்.
இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற,
அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.
தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார்.
பண்டிதர்:- தமிழ்நாட்டு அரசியலும் அல்லாடத் தொடங்கிற்று.
மூப்பர்:- என்ன பண்டிதர் ஐயா! சொல்லுறியள்.
பண்டிதர்:- நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில செல்வாக்கு இருந்தாலும் அவ ரிட்ட அரசியல் அனுபவமும் இராஜதந்திரமும் இருப்பதாகத் தெரிய வில்லை.
கங்காணி:- உண்மைதான் நடிகர் விஜயிட்ட அரசியல் அனுபவமும் இராஜதந்திரமும் இருந்திருந்தால், அ.தி.மு.க விட்ட தான் ஆதரவு கேட்டிருப்பார்.
அ.தி.மு.க வும் பாரதிய ஜனதாக் கட்சியும் கூட்டுச் சேர்ந்துள்ள நிலையில், அ.தி.மு.கவின் ஆதரவை விஜய் பெற்றிருந்தால் தமிழகத்தில ஒரு நிலையான ஆட் சியை நடிகர் விஜய் வழங்கியிருக்க முடியும்.
இங்குதான் அவரின்ர அரசியல் அனுபவக் குறைவு காங்கிரஸிட்ட ஆதரவு கேட்டு, எல்லா வற்றையும் சிக்க லாக்க வேண்டியதாயிற்று.
சாத்திரியார்:- விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு தமிழக ஆளுநரும் முட்டுக்கட்டையாக இருக்கிறாரோ?
கங்காணி:- தமிழக ஆளுநர் சட்டப்படி செயற்படுகிறார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னதாக 118 ஆசனங்கள் தம்வசம் இருப்பதை விஜய் நிரூபிக்க வேண்டும்.
அதை நிரூபிப்பதற்கு மூன்று நாள் அவகாசத்தைத் தமிழக ஆளுநர், விஜய் தலை மையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கொடுத்திருக்கிறார்.
இருந்தும் தொல். திருமாவளவன் தனது ஆதரவை வழங்குவதில இழுத்தடிப்பு செய்வதால விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில இழுபறிநிலை இருக்குது.
சரி எதற்கும் பொறுத்திருந்து பார்ப்பம்.
இவ்வாறு கங்காணியார் கூற, விதானையார் விசுவலிங்கம் ஆழ்ந்த யோசனையில அமர்ந்திருந்தார்.
இதனை அவதானித்த வாத்தியார் வைத்திலிங்கம் என்ன விதானையார் கடும் யோச னையில இருக்கிறியள் என்ன சங்கதி.
விதானையார் :-எனக்கு என்ன யோசனை எல்லாம் எங்கட நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தின்ர உண்டியல் திருடப்பட்ட சம்பவத்தை நினைக்கத்தான் கவ லையாக இருக்குது.
சிறாப்பர்:- என்ன விதானையார் சொல்லுறியள்.
விதானையார்:- நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில உள்ள கண்ணாடி உண் டியலில இருந்த பணம் கடந்த 5 ஆம் திகதி திருடப்பட்டிருக்குது. ஏதோ நயினை ஆச்சி யின்ர அற்புதத்தால திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டதுடன் திருடர்களும் அகப்பட்டி ருக்கினம்.
இதுவரை 22 இலட்சம் ரூபா மீட்கப்பட்டதாக நிர்வாகம் அறிவித்திருக்குது.
சாத்திரியார்:- ஏன்? விதானையார் கோயிலுக்குப் பாதுகாப்பு எதுவும் இல்லையோ.
விதானையார்:- ஏன் இல்லை. பாதுகாப்புப் பணியாளர்கள் எல்லாம் இருக்கினம்.
அப்படியிருந்தும் ஆலயக் கோபுரத்தால ஏறி ஆலயத்திற்குள்ள இறங்கி திருட்டு நடந்திருக்குது.
மூப்பர்:- அப்ப பாதுகாப்புப் பணியாளர்கள் கடும் உறக்கம் போல.
விதானையார்:- ஆலய நிர்வாகம் இறுக்கமாக இருக்கா விட்டால், இப்படித் தான் நடக்கும்.
நயினை அம்மன் மீது மீளா அடியவர்கள் கொண்ட அளவு கடந்த பக்தி காரணமாக ஏகப்பட்ட பணத்தை – நகைகளை காணிக்கையாகக் கொடுக்கினம்.
கண்ணாடி உண்டியலுக்குள்ள இருக்கிற பணத்தைப் பார்த்தால், அதில வெளிநாட்டு நாணயங்களும் இருக்கும்.
அந்தளவிற்கு உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நயினைத் தாயின் அடியவர்கள் தங்கள் அன்புக் காணிக்கைகளை வழங்கி வருகினம்.
இவ்வாறு அடியவர்களால் நயினைத் தாய்க்கு வழங்கப்படுகின்ற காணிக்கைகளைத் தக்க முறையில் பாதுகாத்து, அதனை உட னுக்குடன் ஆலய வங்கிக் கணக்கிலும் வைப்புச் செய்ய வேணும்.
இது விடயத்தில ஆலய நிர்வாகம் அசமந்தம் காட்டினால், இப்படி தான் அடியவர்களின் காணிக்கைப் பணம் பற்றைகளிலும் பைகளிலும் கிடக்கும்.
மூப்பர்:- ஓ! ஆலய நிர்வாகத்திற்கு வழக்குகளைக் கவனிக்கவே நேரம் போதாது. ஒவ்வொன்றுக்கும் வழக்கு என்றால் என்ன செய்வது.
பண்டிதர்:- உண்மை தான். முதலில ஆலய அறங்காவலர்கள்- அறங்காவலர் சபைகள் தங்களை ஆலயப் பணியில முழுமையாக அர்ப்பணிக்க வேணும்.
அப்பதான் ஆலயங்களில குறைபாடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
சிறாப்பர்:- நயினாதீவு நாகபூணி அம்மன் ஆலயத்திற்கு வருகின்ற வருமானங்களை கணக்கிட்டு அதை வங்கியில வைப்புச் செய்வதற்கு ஒரு வங்கிக் கிளையைக் கூட, நயினாதீவு நாகபூசணி ஆலயத்தில இயங்க வைக்கலாம்.
அம்மனுக்குக் காணிக்கை செலுத்துகின்றவர்கள் தங்களின் பணத்தை ஆலய வங்கிக் கணக்கிலக்கத்தில வைப் புச் செய்தால் தேவையில்லாத சோலியைத் தவிர்க்க முடியும்.
இவ்வாறு சிறாப்பர் கனகசபை கூற அதனைத் தானும் ஆமோதிப்பது போல ஆலடிப் பிள்ளையார் கோவில் கண்டாமணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்தவர்கள் எழுந்து கோயிலுக்குச் சென்றனர்.


