Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 12

Share

புதுச்சேரிப் பயணத்தின் பயன் யாது? என்று கேட்டால் பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த வீட்டைத் தரிசித்தது என்பேன்.

ஆம்,ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தேச விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தியவர் சுப்பிரமணிய பாரதியார்.

அதனால் அவரை ஆங்கிலேயர்கள் கைது செய்வதற்காகத் தேடிய போது, பாரதியார் தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் உள்ள ஓர் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தார்.

பத்து ஆண்டுகள் பாரதியார் வாழ்ந்த அந்த வீட்டை புதுச்சேரி மாநில அரசு அருங்கலைப் பொக்கிசமாகப் பாதுகாத்து வருகிறது.

தமிழகத்தில் ஆங்கிலேயரின் ஆட்சி நிலவிய காலத்தில் புதுச்சேரியில் பிரான்ஸின் ஆட்சி இடம் பெற்றது.

இதனால் புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியாரைக் கைது செய்கின்ற அதிகாரம் ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை.

இங்கு தான் ஆங்கிலேயர்களதும் பிரான்ஸியர்களதும் ஆட்சிகள் சட்ட வரண்முறைக்கு உட்பட்டு இடம் பெற்றமை தெரியவருகிறது.

சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்த போதுதான், புதுச்சேரியைச் சொந்த இடமாகக் கொண்ட பாரதிதாசனுக்குப் பாரதியாரின் தொடர்பு கிடைக்கப் பெற்றது.

பாரதிதாசன் மட்டுமன்றி, தேசவிடுதலையின்பால் ஈர்க்கப்பட்ட பலரும் பாரதியாரின் வீட்டிற்குச் சென்று இந்திய தேசத்தின் எதிர்காலம் பற்றியும் அந்நியர்களுக்கு எதிராகப் போராட வேண்டியதன் தேவை பற்றியும் ஆராய்ந்ததான தகவல்களும் ஆவணங்களும் அங்கு பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அமைதியான சூழல், அகன்ற வீதியின் ஓரத்தில் அமைந்த பாரதியாரின் இல் இடம், எங்கள் மண்ணில் கூட்டுக் குடும்ப வாழ்வியலை அடையாளப்படுத்துகின்ற நாற்சார வீட்டை ஒத்ததாகக் காணப்படுகிறது.

திண்ணைப் பண்பாட்டின் அடையாளமாக விளங்கக்கூடிய பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து செல்கின்றனர்.

புதுச்சேரிக்குச் சுற்றுலா வருகின்றவர்கள், தாம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் பாரதியார் தங்கியிருந்த வீட்டைக் கட்டாயமாகப் பதிவிட்டிருப்பர்.

அந்தளவிற்கு பாரதியார் வாழ்ந்த வீடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தவிர, பாரதியார் வாழ்ந்த வீட்டில் பாரதியாரின் கவிதைகள் அவரின் கையயழுத்துப் பிரதியாகப் பேணப்பட்டு வருவது பார்ப்போரை வியக்க வைக்கும்.

இதையும் கடந்து பாரதியாரின் குடும்பம், பாரதிதாசனும் பாரதியாரும் சேர்ந்திருக்கின்ற புகைப்படம் என பாரதியாரின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் என்பன பாரதியார் வாழ்ந்த வீட்டில் மிகவும் பக்குவமாகப் பேணப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்காக அலுவலர்கள் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

தவிர,அங்குள்ள படங்கள் மற்றும் ஆவணங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link