Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 13

Share

தொல்லியல் சான்றுகளைப் பாதுகாத்து அவற்றைப் பேணுவதில் புதுச்சேரி மாநில அரசு கொண்டுள்ள கருசனை எத்துணை உயர்வான தென்பது, சுப்பிரமணிய பாரதியார் வாடகைக்கு அமர்ந்த வீட்டைப் பாதுகாப்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

ஆம்,எதையுமே பாதுகாக்க முடியாத எங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்சேரிக்குச் சென்ற எமக்கு, பாரதியார் இருந்த வீட்டைப் புதுப்பித்து அவர் சார்ந்த ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதும் அதற்கும் மேலாக அவற்றைப் பொது மக்கள் பார்வையிடுவதற்குமான ஏற்பாடுகள் எம்மை வியக்க வைத்ததில் ஆச்சரியமில்லை.

உண்மை. எங்கள் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாண மன்னர்கள் வாழ்ந்த இடங்கள் அழிந்து போகின்றன. மந்திரி மனையின் தோற்றம் எங்கள் இனத்தின் அசமந்தத்தை உறுதி செய்கின்ற அடையாளமாகும்.

இதேபோல பட்டத்து இளவரசிகள் நீராடிய ஜமுனா ஏரியை அறியாதவர்கள் பலர்.

அதுபோல யாழ்ப்பணத்துப் பண்பாட்டின் உச்சமாக இருந்த யாழ்ப்பாணச் சத்திரத்துமடம், கந்தர்மடத்திலுள்ள அன்னசத்திரம் என்பன அடையாளம் இன்றி உருக்குலைந்துவிட்டன.

தவிர,யாழ்ப்பாணக் கோட்டை குடியேற்ற வாதத்தின் ஓர் அடையாளம்.

எனினும் யாழ்ப்பாணக் கோட்டை, ஊர்காவற்றுறைக் கடல் கோட்டை என்பன எம் ஆளுகையில் இல்லாமல் படையினர் வசம் இருக்கிறதெனில், நாம் வெறுங்கையோடு நிற்பது தெரிகிறது.

என்ன செய்வது என்ற ஏக்கத்தோடு பாரதியாரின் வீட்டுப்படிகளில் இருந்து இறங்கினேன்.

தொடர்ந்து அருள்மிகு மணக்குள விநாயகர் ஆலயத்திற்குச் சென்றோம்.

மணக்குள விநாயகர் ஆலயம் பாரதியார் வழிபட்ட ஆலயம் என்ற ஞாபகப்படுத்தலோடு, மணக்குள விநாயகரைத் தரிசிக்கும் பேறு எனக்கும் கிடைக்கப்பெற்றது.

வழமை போல் ஆலயச் சூழலை வர்த்தக நிலையங்கள் ஆக்கிரமித்திருந்தன.

தவிர, வழிபாட்டில் அதிகளவான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

மணக்குள விநாயகரைத் தரிசித்த மனநிறைவோடு அண்ணாசாலையில் உள்ள ராம் விடுதிக்குச் சென்றோம்.

இந்தத் தரிசிப்புக்களை எல்லாம் செய்வதற்கு கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

அவருடைய தொண்டர்கள் என்னுடன் கூட வந்திருந்தனர்.

கம்பவாரிதி மீது கொண்ட அளவு கடந்த பக்தி காரணமாக எம்மோடும் அவர்கள் மிக வும் அன்புரிமையோடு நடந்து கொண்டதை ஒரு போதும் மறந்துவிட முடியாது.

அதிலும் குறிப்பாக உயர் வள்ளுவம் அறக்கட்டளையை ஸ்தாபித்து, அதன் மூலம் கம்பவாரிதியை தமிழ் நாட்டிற்கு அழைத்து, அங்கு திருக்குறள் விரிவுரையை நடத்து கின்ற செந்தில், அவருடன் இணைந்து செயலாற்றும் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கடமையாற்றிய சென்னையைச் சேர்ந்த இளங்கோ மற்றும் தாமோதரன், கம்பவாரிதியின் உரைகளால் ஈர்க்கப் பட்டு ஆன்மீக நாட்டம் கொண்ட சேலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் திருப்பூரைச் சேர்ந்த வேல்பாண்டி, சேலத்தைச் சேர்ந்த தினகரன் ஆகியோரின் பெருந்தன்மையும் அவர்களிடம் இருந்த இறை நாட்டமும் உண்மையிலேயே என்னை ஆச்சரியப்படுத்தின.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link