ஆச்சி அறிவுரை
Share
பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளுக்கு…பேராண்டி…
போனமுறை நீ விடுமுறையில வந்து நிக்கேக்குள்ள பேஸ்புக் பாக்க சொல்லித் தந்த பிறகு நேரம் கிடைக்கேக்குள்ள நல்ல விடயம் எதையாவது பாக்கிறனான்.
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் தான் அது நஞ்சு பேராண்டி. அது சிலருக்குப் புரியிறதில்லை.
அண்டைக்கு ஒரு காணொளி பார்த்தன். அத உனக்கு சொல்ல வேணுமெண்டு ஆவலா இருந்துது..
ஒரு வயதான அப்பாவும் அவரது மகனும் முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கினம். மகன் “அப்பாவ இங்க சேர்க்க வேணும்” எண்டு சொல்ல முதியோர் இல்லத்தில் வேலை செய்யிறவா தங்கட முதியோர் இல்லம் பற்றிச் சொல்லுறா.
இங்க 150 முதியவர்கள் இருக்கினம். எல்லாருக்கும் தனித்தனி அறை. நல்ல சூழல், சுத்தமான, ஆரோக்கியமான உணவு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முதியவர்களையும் மருத்துவர் பார்ப்பார். வீட்டில இருக்கிறது போல அவை இங்க இருக்கிறத உணருவினம்.
அப்பா தங்கிற அறைக்கு ஏ.சி வேணுமா என அவர் கேட்க, அதற்கு தந்தை ஏ.சி வேண்டாம் என மறுக்கிறார். மகன் இல்லை அப்பா வெக்கை காலத்தில கஸ்ரப்படுவியள் ஏ.சி இருக்கட்டும் என்பார்.
அறையில் ரி.வி? அதற்கு தந்தை இல்லை இல்லை. பொதுவாக ரி.வி பார்ப்பது எனக்குப் பிடிக்காது அதனால் ரி.வி வேண் டாம் என மறுக்கிறார்.
மகன் “இல்லை அப்பா தனியாக இருக்கும் போது ரி.வி உங்கள் தனிமையைப் போக்கும்” என்று கூறி ரி.வியையும் இணைத்துக் கொள்கிறார்.
ஒரு வருடத்திற்கான காசோலையைக் கொடுத்து விட்டு தனது காரில் இருந்த தந்தையின் உடமைகளை எடுக்க மகன் செல்கிறான்.
காரிலிருந்து தந்தையின் உடமைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது தனது தந்தையுடன் அந்த முதியோர் இல்லத்தை நடத்தும் மதகுரு யதார்த்தமாகப் பேசிக் கொள்வதைக் கவனிக்கின்றான்.
மதகுருவின் அருகே வர, தந்தை இவர்தான் என் மகன் என மகனை அறிமுகப்படுத்த, அவரை ஆசிர்வதிக்கிறார் மதகுரு.
அந்தநேரம் தந்தையை அங்கு பணிபுரியும் ஒருவர் வந்து அறையைப் பார்வையிட அழைத்துச் செல்ல, மகன் அந்த மதகுருவிடம் கேட்கிறான்.
நீங்களும் அப்பாவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஏற்கனவே உங்களுக்கு அப்பாவைத் தெரியுமா? என்று.
அதற்கு அவர் கூறுகிறார். முப்பது வருடங்களுக்கு முன் ஒரு அநாதை ஆண் குழந்தையை இங்கிருந்து தத்தெடுத்துச் சென்றார் உங்கள் அப்பா.
இதை உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் எனக்கு மனது கேட்கவில்லை. அதனால் தான் சொன்னேன்.
நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்கள் தந்தையை நாங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றோம் என்று கூறிச் சென்றார். அந்த மதகுரு.
மகனின் முகம் மாறுகிறது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது அதோட அந்த காணொளி முடியுது பேராண்டி.
பெற்றவர்களை முதியோர் இல்லங்களில விடுகிற ஒவ்வொரு பிள்ளைகளும் கட்டாயம் பார்க்க வேண்டி காணொளியது.
பேராண்டி, ஒவ்வொரு பெற்றாரும் தங்கட பிள்ளை நல்ல நிலைக்கு வரவேண்டும் எண்டுறதுக்காக அவை செயயிற தியாகங்கள் எண்ணில் அடங்காதவை.
ஆனால் அனேக பிள்ளைகள் பெற்றாரின்ர தியாகத்தையும் மனநிலையையும் புரிஞ்சு கொள்ளுறதில்லை.


