நெருக்கப்படும் தமிழர் குரல்வளை
Share
மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழினத்தின் கழுத்தை இறுக்கத் தொடங்கிவிட்டது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது முற்றுமுழுதாக தமிழினத்தின் மீது பிரயோகிக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்தேதும் இல்லை.
ஒருவர் பங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் எனின், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் எத்தனை நாட்களேனும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய முடியும் என்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பிலும் அதன் கொடூரத்தன்மை தொடர்பிலும் அறிந்திராத சிங்கள பெரும்பான்மையினர் அதற்கு ஊக்குவிப்பு வழங்கினர்.
தமிழ் இளைஞர்கள் இச் சட்டத்தினூடாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இன்று வரை இக்கொடூரச் சட்டத்தின் பிடியில் சிக்கி தமது வாழ்வை சிறைகளில் கழித்து வரும் துர்ப்பாக்கிய நிலை இருக்கவே செய்கிறது.
இவ்வாறான இந்தக் கொடும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வீரியத்தை சிங்கள மக்கள் உணரும் சந்தர்ப்பத்தை இறைவன் வழங்கினான்.
ஆம், “கோட்டா கோ கம” எனும் தொனிப்பொருளில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் திரண்டெழுந்ததை நாம் மறந்திட முடியாது.
குறித்த அந்தப் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட இளைஞர்கள் மீது, பின்னாளில் ஆட்சிப் பொறுப் பேற்ற ரணில் அரசு பயங்கரவாதத் தடைச்சட்த்தைப் பிரயோகித்தது.
அப்போது ஒட்டுமொத்த சிங்கள தேசமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தது.
தமிழ் இளைஞர்கள் மீது பிரயோகிக்கும் போது வராத எதிர்ப்பு சிங்கள இளைஞர்கள் மீது பிரயோகிக்கும் போது வருகிறதே எனும் ஆதங்கம் இருந்தாலும் யார் குற்றியே னும் அரிசியானால் சரி எனும் பொன்மொழியை ஏற்று அமைதியாயினர் தமிழர்.
இதன் பின்னர் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக பயங்கரவாதத் தடைச்சட்ட இரத்து இருந்தது.
அந்த வெற்றிக்கு இந்த வாக்குறுதியும் மிக முக்கிய பங்காற்றியிருந்ததை நாம் மறந்துவிட முடியாது.
நிலை இவ்வாறு இருக்கும் போது தமிழ் தேசிய எழுச்சிப் பாடலைப் பாடியதாக குற்றம் சாட்டப்பட்டு கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் சங்கீர்த்தனன் கடந்த 2 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதான செய்தி தமிழ் மக்களை உள நெருக்கீட்டுக்குள்ளாக்கி யுள்ளது.
ஆம், 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான தமிழினத்தின் வலி-வேதனை என்பன மிகக் கொடூரமானது.
ஒரு இனம் அனுபவிக்கக் கூடாத அத்தணை ரணங்களையும் அனுபவித்து, அதிலிருந்து மீண்டெழத்துடிக்கும் ஒரு தேசிய இனத்தை கருவறுக்க நினைப்பது மிகப் பெரும் அபத்தம்.
ஈழத்தமிழினம் கடந்து வந்த பாதை நெருப்பாற்றிலும் மோசமானது. ஆயினும், தன் வரலாறுகளையும் பண்பாட்டையும் சிதையவிடாது பற்றிப் பிடித்திருக்கும் அந்த இனத்தின் குரலை நசுக்க நினைப்பது அறமன்று.
தேசிய புரட்சிப் பாடலைப் பாடினான் என்று ஒரு இளம் கலைஞனை பயங்கரவாதத் தடைச்சத்தினூடே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைது செய்ததெனின், அது சாதாரணமான விடயமன்று.
ஒரு இனத்தின் மீட்சிக்கான போராட்டத்தையும் அதன் தாக்கங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு சொல்லிப் புரிய வைக்க வேண்டிய தேவையில்லை.
அவர்களின் கடந்த காலம் மிகப் பயங்கரமானது. அப்படிப்பட்ட பயங்கரங்களைக் கடந்து இன்று ஒரு நாட்டின் அரசாகத் திகழும் இந்த அமைப்பா எழுச்சிப் பாடலைப் பாடியதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகித்தது என்று நினைக்கும் போது வார்த்தைகள் வரமறுக்கிறது.
அவ்வாறெனின் அதே இனவாத-மதவாத சக்திக்குள் சிக்குண்டு கிடக்கும் பத்தோடு பதினொன்றா இந்த அரசும் என்ற கேள்வியும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் தமிழ் தேசிய வரலாற்றில் என்றுமில்லாத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியிருந்தனர் தமிழ் மக்கள்.
ஆம், தமிழ் தேசிய கட்சிகளையும் அவர்களின் கொள்கைகளையும் தூக்கியெறிந்து விட்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வாக்களித்து வடக்கு கிழக்கில் ஐந்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஆசனங்களை அள்ளி வழங்கியிருந்தனர்.
அவ்வாறு நம்பிய தமிழ் மக்களுக்கு அந்த அரசாங்கம் இவ்வாறு செய்கிறதா? என்ற கேள்விக்கான பதிலை இந்த அரசாங்கம் கொடுத்தாக வேண்டும்.
தென்னிலங்கையில் ஒரு பௌத்ததேரர் சிறுமி ஒருத்தியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விடயம் தொடர்பில் குறித்த பௌத்த தேரருக்கு ஆதரவாக நீதி மன்றில் ஆஜரான சட்டத் தரணிகள், பௌத்தத்தை சிதைக்க நினைக்கிறது இந்த அரசு என கிழர்ந்தெழுந்த அரசியல்வாதிகள், பௌத்த துறவிகள் விடும் தவறை விசாரிக்க தர்ம நீதிமன்றம் உருவாக்கப்படும் என்ற ஜனாதிபதியின் பேச்சு, சிறு மியை வன்புணர்ந்த பௌத்த துறவிக்கு வழங்கிய பிணை விடுதலை என்பவற்றுடன் இவ்விடயத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஆக, ஈழத்து எழுத்தாளர் தீபச் செல்வனின் புத்தகத் துக்குத் தடை.
எழுச்சிப் பாடலைப் பாடிய இளைஞன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடே கைது.
இதனூடாக தமிழ் மக்கள் கடந்து வந்த வலிகளையும் வரலாறுகளையும் பதிவிடத் தடைவிதித்து, அதனூடாக அவர்களை ஏதிலிகளாக்கும் எண்ணத்தில் செயற்படுகின்றனரோ என்ற அச்சம் கலந்த சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் தோன்றிற்று.
அபிமன்யு.


