Type to search

Articles ஆச்சி அறிவுரை

ஆச்சி அறிவுரை

Share

திருமண – நிகழ்வுகளில் காணாமல் போகும் பண்பாடு – கலாசாரம் பேராண்டி…

எங்கட பண்பாடு கலாசாரத்தைச் சீரழிக்கிறது பேரினவாத சிங்கள அரசியல்வாதிகள்தான். அவர்கள் திட்டமிட்டு அதைச் செய்யினம் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறம்.

ஆனால் உண்மை எது தெரியுமே.

எங்கட பண்பாடு-கலாசாரச் சிதைவுக்கு நூறு விகிதம் நாங்கள் தான் காரணம்.

இதைச் சொல்ல பலருக்கு கோபம் வரும். ஆனாலும் அதுதான் உண்மை.

கோயில்களில நாதஸ்வர தவில் கச்சேரி நடத்திவந்தனாங்கள். இது எங்கட தமிழ் கலாசாரத்தோட பின்னிப் பிணைஞ்சிருந்தது.

ஆனால் இப்ப புதுமை எண்டுற பெயரில கேரளசெண்டை மேளம் பிடித்து கோடி கோடியாய்ப் பணத்தைக் கொட்டிக் கொடுத்து சந்தோசப்படுறம். அந்தச் சந்தோசம் எங்கட கலாசாரத்தைச் சிதைக்கிறதுக்கானதோ பேராண்டி.

போன கிழமை வட்டுக்கோட்டையில இருந்து ஒரு அன்பர் தொடர்பு கொண்டிருந்தார்.

திருமணநிகழ்வுகளில நடக்கிற கலாசார பிறழ்வுகளைத் தடுத்து நிறுத்த ஏலாதோ எண்டு ஆதங்கப்பட்டார்.

புதுமை எண்டுற பெயரில எங்கட இளம் சமூகம் படுகிறபாட்டைப் பார்க்க நெஞ்சு வலிக்குது. இப்பிடியே போனால் அடுத்த தலைமுறை தமிழ் பண்பாடு கலாசாரத்தைப் புண்படுத்திவிடும் எண்டு சொல்லிக் கவலைப்பட்டார்.

வீட்டு திருமண நிகழ்வு எண்டைக்கு மண்டபத்துக்குப் போச்சுதோ அண்டைக்கு பிடிச்ச சனியன் விட்டபாடில்லை.

பேராண்டி, திருமண நிகழ்வுகளைப் படம்பிடிக்கிறவை கொஞ்சம் மனச்சாட்சியோடு நடந்து கொள்ள வேணும்.

திருமணத்தைப் படம் பிடிக்கிறது நல்ல வேலை. அது காலம் காலமாய் எங்களோட, எங்கட நினைவுகளோட இருக்கிற பொக்கிஷம். அதில மாற்றுக்கருத் தில்லை.

ஆனால் திருமண நிகழ்வில ஐயர் கிரியை செய்யிற நேரம் தாங்கள் தலையிடுறதை நிப்பாட்ட வேணும்.

ஓம் பேராண்டி, நான் ஒரு கலியாணத்துக்குப் போனனான். மாப்பிளை தாலி கட்டுற நேரம் கமராவைப் பாக்கேல்லையெண்டு ஒரு படப்பிடிப்பாளரைக் கொஞ்சம் பொறுங்கோ எண்டு தாலி கட்டப் போன மாப்பிள்ளையைத் தடுத்துப் படத்துக்கு போஸ் குடுக்கச் சொன்னார்.

எனக்கு கெட்ட கோபம். நல்ல ஏச்சுக் குடுத்தன். தலையைக் குனிஞ்சு

கொண்டு நிண்டார்.

திருமண மேடை எவ்வளவு புனிதமான இடம். இறைவனை அந்த இடத்தில இருத்தி, கடவுள் சாட்சியா நடக்கிற கலியாண மேடையில சப்பாத்து, செருப்புப் போட்டுக் கொண்டு நிக்கிறது எவ்வளவு அபத்தமானது.

மணமக்களை அறுகரிசி இட்டு யார் வாழ்த்திறது எண்ட விவஸ்தை இல்லாமல் போச்சு. கண்டமேனிக்கு காலணியோட, கறுத்த காட்சட்டை சேட்டோட வயது வித்தியாசமில்லாமல் அறுகரிசி போடுறது முறையோ?

இதைவிட சினிமாப் பாணியில குறூப் டான்ஸ் ஆடுறது. மாப்பிள, பொம்பிள்ளையின்ர சினேகிதர் மேடையில நிண்டு செல்பி எடுக்கிறது, றீல்ஸ் செய்யிறதெல்லாம் எங்கட கலாசாரமாகிப் போகிடுமோ எண்டு பயமா இருக்குது.

எங்கட அடுத்த சந்ததிக்கு தமிழ் பண்பாடு கலாசாரத்தைக் கையளிக்க வேண்டியது பெரியவர்களாகிய எங்கடகையில தான் இருக்குது.

அதை நாங்கள் சரியாச் செய்ய வேணும். இல்லாட்டி இன்னும் ஐம்பது வரி

சத்தில எல்லாம் தலைகீழா மாறிடும் பேராண்டி

ஆச்சி வருவா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link