பஞ்ச சீலமும் பஞ்சமாபாதகமும்
Share
இந்து மதம் ஆதியும் அந்தமுமில்லா மதம். மனித வாழ்வின் ஒப்பற்ற ஒழுக்கத்தின் மூலமாக விளங்குகிறது அது.
அப்பேற்பட்ட நல் ஒழுக்கம் நிறைந்த இந்து மதத்தைத் பின்பற்றி தோற்றம் பெற்றதே பௌத்தம்.
ஆம், கௌதம புத்த பெருமான் கொல்லாமை, திருடாமை, காம வெறியின்மை, பொய்யாமை, குடியாமை (மது அருந்தாமை) போன்ற ஐந்து கொள்கைகளை முன்நிறுத்தினார்.
அதனூடே தோற்றம் பெற்றதே பௌத்த மதம். அப்பேற்பட்ட உன்னத பௌத்த மதத்திற்குள் இருக்கும் பௌத்த துறவிகள் சிலரின் செயற்பாடுகள் பௌத்த கொள்கைகளை உடைத்தெறிவதாய் அமைவதுடன் பசுந்தோல் போர்த்திய புலியாய் காவி தரித்திருப்பது வேதனையானது.
அநுராதபுரம் அட்டமஸ்தானதிபதி பல்லேகம தேரர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த விடயம் அண்மையில் வெளிவந்து முழு நாட்டையும் உலுக்கியிருந்தது.
சிறுமியை விகாரைக்கு அழைத்த, குறித்த பௌத்த துறவி பலமுறை பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் பல சிறுவர்சார் அரச அமைப்பொன்றினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் தேரரைக் கைது செய்ய முன்வராத பொலிஸார் அவரைக் காக்கும் செயலில் ஈடுபட்டிருந்தமை ஒட்டுமொத்த நாடும் வெட்கித் தலை குனியும் செயல்.
ஆயினும் குறித்த விவகாரம் நிலை மீறிச் சென்ற பின்னரே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிடப்பட்டார்.
பௌத்த தேரரைப் பிணை எடுப்பதற்கு நீதிமன்றில் நூற்றுக் கணக்கான சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தமை சட்டம் யாருக்கானது எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது.
அநுராதபுரம் அட்டமஸ் தானாதிபதி பல்லேகம தேரர் பலரால் மதிக்கப்படக் கூடியவர் அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் அவர் பௌத்த மத துறவறத்துக்கிழுக்கான மகா பாவத்தைப் புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டுக்களும் அதற்கான ஆதாரங்களும் பலமாய் இருக்கும் நிலையில் ஒரு குற்றவாளியைக் காக்கத் துடிப்பது அபத்தம் நிறைந்தது.
தேரரினால் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட சிறுமிக்கு நீதி வேண்டி நாடு பூராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்உரை பலரையும் வியப்புக் குள்ளாக்கியுள்ளது.
ஆம், மாத்தறை திஹ கொட மிதெல்லவல புராதன விகாரையில் அரச வெசாக் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை கொண்ட
“தர்ம நீதிமன்றம்” ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நேரத்தில் நாம் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆம் தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்ட விகாரையினை அகற்றக்கோரிய போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகளை, அவர் அணிந்திருந்த காவி உடைக்கோ, உருத்திராட்ச மாலைக்கோ, அவரின் புனித துறவறத் துக்கோ மதிப்பளிக்காமல் அவரை குண்டுக்கட்டாகத்
தூக்கி பொலிஸ் வாகனத்துக்குள் எறிந்து அவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட போது வராத எண்ணங்களும் சிந்த
னைகளும் இப்போது ஆட்சியாளர்களிடம் எழுந்துள்ளது என்பதை நாம் நுணுகி ஆராய வேண்டும்.
தனது துறவறத்துக்குச் சான்றான உருத்திராட்ச மாலை அறுந்து நிலத்தில் வீழ்வது கண்டு மனம் நொந்து கண்ணீர் விட்ட இந்து மதத்தைச் சார்ந்த துறவி ஒருவருக்கான நீதி எங்ஙனம்?
அந்தோ ஒரு பச்சிளம் பிள்ளையை பலமுறை பலாத்காரம் செய்த பௌத்த துறவிக்காக நீதிமன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் எங்ஙனம்?
அந்தோ பௌத்த துறவிகள் செய்யும் தவறை விசாரணை செய்யவும் அவர்கள் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கவும் தனியானதொரு நீதிமன்றம் அமையும் என்ற ஜனாதிபதியின் கூற்று எங்ஙனம்?
குறித்த விடயம் தொடர்பில் இனவாதம் மதவாதம் கடந்து மனிதாபிமானம் என்ற ஒப்பற்ற கொள்கைக்குள் நாம் அடங்க வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமே.
யார் தவறிழைத்திலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். செய்தாக வேண்டும்.
பாதிப்புக்குள்ளான சிறுமி பெரும்பான்மை சிங்கள சிறுமியாக இருக்கும் போதே இந்நிலை எனின் அவர் ஒரு சிறுபான்மைத் தமிழ்ச் சிறுமியாக இருந்திருந்தால் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்ற கருத்தையும் நாம் இங்கு கவனித்தாக வேண்டும்.
உலகத்தவர்களினால் போற்றப்படுகின்றன புனிதம் நிறைந்த பெருமதிப்புக்குரிய பௌத்த துறவறத்துக்குள் தவறுகள் நடப்பின் அவற்றை வெளிப்படைத் தன்மையுடன் சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அதுவே இந்த நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெருமை.
அபிமன்யு.


