கப்பல்களை சிறைபிடித்த ஈரான்
Share
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டு மூன்று வணிகக் கப்பல்களைச் சிறைபிடித்துள்ளனர்.
சர்வதேச கடல்சார் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, ‘எபமினன்டோஸ்’ , ‘எம்.எஸ்.சி. பிரான்சிஸ்கா’ மற்றும் கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான ‘யுபோரியா’ ஆகிய கப்பல்கள் ஈரானியப் படையினரால் முடக்கப்பட்டுள்ளன.
இதில் ‘எபமினன்டோஸ்’ கப்பல் இந்தியாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சிறைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான MSC நிறுவனத்தின் கப்பலும் இதில் அடங்கும் என்பதால் சர்வதேச கடல் வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள ஈரான், பிடிபட்டுள்ள கப்பல்கள் முறையான அனுமதியின்றி இயக்கப்பட்டதாகவும், கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகளில் மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தக் கப்பல்கள் ஈரானின் கடலோரப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், இது தங்களது எச்சரிக்கை வரம்பைத் தாண்டிய செயல் என்றும் ஈரான் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. இந்தத் தொடர் கப்பல் முடக்கங்களால் அந்தப் பிராந்தியத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


