இந்திய உப ஜனாதிபதியை சிக்கெனப் பிடியுங்கள்
Share
தமிழர்களின் நலனில் இந்தியா ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதேவேளை தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஆம், இந்தியாவின் உப ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் இருப்பது எமக்குக் கிடைத்த அருமந்த வாய்ப்பு எனலாம்.
அதிலும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கருசனை கொண்டவராக இருப்பவர் இராதாகிருஷ்ணன்.
அவ்வாறு எம் தமிழ் மக்கள் மீது கருசனை கொண்ட ஒருவர் இந்திய தேசத்தின் உப ஜனாதிபதியாக இருப்பதென்பது எம் தமிழினத்துக்கு மிகப் பெரும் பலம்.
தவிர, இலங்கைக்கு வருகை தந்த இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்திருப்பாராயின், அஃது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆறுதலையும் தேறுதலையும் தந்திருக்கும்.
என்ன செய்வது நம் அரசியல்வாதிகளின் அசமந்தம் காரணமாக, இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனின் யாழ்ப்பாண வருகை சாத்தியமற்றுப் போனது.
உண்மையில் இந்திய தேசத்தின் உப ஜனாதிபதியாக சி.பி.இராதாகிருஷ்ணன் தெரிவாகிய போது, அவருக்கான வாழ்த்துச் செய்தியில்; எங்கள் யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். உங்கள் வருகை எங்கள் இனத்தின் வாழ்வுக்கு உந்துதலாக இருக்குமென நம் தமிழ் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துமடல் அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால் அதனை நம்மவர்கள் செய்யவில்லை.
அதைத்தான் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்திய உப ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்ற போதாவது, அவரது நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவதான ஒழுங்குகளையேனும் நாம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடந்தாகவில்லை.
ஆயினும் ஓர் ஆறுதல் மட்டும் உண்டு. அதாவது இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனை நம் தமிழ்த் தலைவர்கள் கூட்டாகச் சந்தித்துள்ளனர்.
இச் சந்திப்பு, இந்தியாவுடன் ஈழத் தமிழர்கள் ஒரு வலுவான நட்பை – உறவை ஏற் படுத்திக் கொள்வதற்கான அருமந்த வாய்ப்பு எனலாம்.
ஆம், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்திய உப ஜனாதிபதி இராதாகிருஷ்ணனுடன் தொலை பேசி மூலம் அல்லது இணையத்தளம் வாயிலாக உரையாடுவதற்கு ஒரு நல்ல களம் ஏற்பட்டுள்ளது.
இதனை நம்மவர்கள் தக்கமுறையில் பயன்படுத்தி இந்திய உப ஜனாதிபதி சி.பி.இராதா கிருஷ்ணனை சிக்கனப் பிடித்து நம் இனம் உய்வு பெற வழி தேட வேண்டும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


