உலகில் புகைபிடிப்பவர்களில் இரண்டில் ஒருவர் சீனர்
Share
சீன அதிபர் ஷீ ஜின்பிங் புகையிலைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவதாக அறிவித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், உலக சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதத்தை சீனா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.
உலகளவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், சர்வதேச சிகரெட் நுகர்வில் 47.2 சதவீதப் பங்கைக் கொண்டு சீனா முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து சீன சுகாதாரத் துறை முன்னாள் அதிகாரிகள் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிக்கைகள் மற்றும் பீஜிங்கைச் சேர்ந்த சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜெங் ரோங்கின் தரவுகளை தொகுத்து அமெரிக்க பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
சீன அதிபராக ஷீ ஜின்பிங் 2013ல் பதவியேற்ற போது புகையிலை விற்பனையை கட்டுப்படுத்துவேன் என அறிவித்திருந்தார், இருந்தும் சீனா உலகின் மிகப்பெரிய சிகரெட் சந்தையாகவே தொடர்கிறது.
கடந்த 2003 முதல் 2023 வரை சீனாவில் சிகரெட் நுகர்வு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலத்தில் உலகின் மற்ற நாடுகளில் சிகரெட் விற்பனை 26.4 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது சீனாவில் ஆண்டுக்கு 2.44 லட்சம் கோடி சிகரெட்டுகள் விற்பனையாகின்றன.
இவற்றில், 90 சதவீதத்தை சீனா தேசிய புகையிலை நிறுவனம் என்ற அரசு நிறுவனம் விற்பனை செய்கிறது. உலகில் உற்பத்தியாகும் மொத்த சிகரெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை இந்நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 2025ல் சீன அரசின் புகையிலை நிறுவனம் அரசுக்கு 21 லட்சம் கோடி ரூபாய் லாபம் மற்றும் வரி வருவாயை அளித்து உள்ளது. இது, சீன அரசின் மொத்த வருவாயில் ஏழு சதவீதம். ராணுவத்துக்கு சீனா செலவிடும் பட்ஜெட்டும் இந்த தொகையும் சமம்.
அரசுக்கு பெரும் வருமானம் தருவதால், வலுவான புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


