ஜனாதிபதி தலைமையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை 3-ஆம் கட்டப் பணிகள் இன்று ஆரம்பம்!
Share
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் 3-வது கட்டப் பணிகள் இன்று (29) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கலகெதர, பம்பரக்கஹ சந்தியில் ஆரம்பமாகிறது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரை செயல்படுத்தப்படுகிறது.
இந்த கட்டுமானப் பணிகளுக்காக, தகுதியுள்ள உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு இடையே போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் மூலம், அரசாங்க நிதியைப் பயன்படுத்தி 7 ஒப்பந்தப் பொதிகளின் (Packages) கீழ் ஏலங்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கமைய, உயர்மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான வீதியின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
அதன்படி, ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரையிலான அடுத்த கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கட்டத்தில் 19 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் எஸ்.பி. விஜேகோன் தெரிவித்துள்ளார்.
இதற்காகச் செலவிடப்படும் தொகை சுமார் 112 பில்லியன் ரூபாவாகும்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


