Type to search

Headlines Local News News

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு

Share

மத்திய கிழக்கில் போர்கள் நிலவிய போதிலும், இலங்கை அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கைகள், நாட்டின் மெக்ரோ-பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் ஈவன் பாபகியோர்கியூ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இன்றைய தினத்துடன் நிறைவடையும் நிலையில், அவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர்நேற்று (30) பிற்பகல் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர், இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் நிதி வசதிகள் தொடர்பான 7ஆவது மதிப்பாய்வு குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல், நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, பொருளாதார சீர்திருத்தப் பயணத்தை இதே வேகத்தில் முன்னோக்கிக் கொண்டு செல்வது அத்தியாவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிப்புற அதிர்ச்சிகள் தொடர்ந்து ஏற்படும் எனத் தெரிவித்த தூதுக்குழுத் தலைவர், இலங்கையின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்களின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சீர்திருத்தச் செயல்முறைகளுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தை விவரித்த ஈவன் பாபகியோர்கியூ, மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பில் இலங்கை இதுவரை எடுத்துள்ள பொருளாதாரக் கொள்கை நடவடிக்கைகள் மிகவும் பொருத்தமானவை என்றும் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link