இலங்கை வரவுள்ளார் ரஷ்ய சுகாதார அமைச்சர்!
Share
ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ (Mikhail Murashko) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இலங்கையின் சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான சுகாதாரத் துறை உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகும்.
இதற்கு மேலதிகமாக, அமைச்சர் விஜித ஹேரத்துடனும் இந்தப் பிரதிநிதிகள் குழு விசேட பேச்சுவார்த்தைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மே மாதம் 04 ஆம் திகதி, ரஷ்ய சுகாதார அமைச்சர் தலைமையிலான குழுவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அத்துடன், இரு நாடுகளின் சுகாதார அமைச்சுகளுக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களுக்கான பயிற்சிகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள், கல்விசார் ஒத்துழைப்புகள் (மாணவர் பரிமாற்றம், கூட்டுப் பாடநெறிகள்), ஆயுர்வேத மருத்துவத் துறை மற்றும் மருத்துவச் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
தமது மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, ரஷ்ய சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ உள்ளிட்ட குழுவினர் மே மாதம் 05 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.


