இன்று ஒரு தகவல்
Share
சிறந்தவன் யார்
ஒரு ஊரிலே ஒரு ராஜா. அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது.
அடுத்தபடியாக ஒரு இளவரசன் பட்டத்துக்கு வரவேண்டும.; அந்த ராஜாவுக்கு மூன்று பிள்ளைகள்.
மூன்று பேரும் ஒன்றாகப் பிறந்தவர்கள். அதனாலே மூன்று பேருக்கும் ஒரே வயது. முன்னே பின்னே பிறந்திருந்தால் மூத்த மகனுக்கு அரச பதவியை கொடுத்துவிடலாம்.
மூன்று பேருக்கும் ஒரே வயது என்பதனாலே யார் ராஜாவாக வருவது என்பதில் பிரச்சினை வந்து விட்டது.
குதிரை ஏற்றம் , வில்வித்தை இப்படி பார்த்தாலும் எல்லோருக் கும் ஒரே மாதிரியான திறமை.
இந்த மூன்று பேரிலே யார் சிறந்தவர் என்று கண்டுபிடிக்கவேண்டும் . எப்படி கண்டு பிடிப்பது. ராஜா யோசனை செய்தார்.
அவராலே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அதனாலே நேராக காட்டுக்குப் போனார் அங்கே ஒரு குரு இருந்தார். அவரிடம் போய் யோசனை கேட்டார்.
அதைக் கேட்டுவிட்டுத் திரும்பி வந்தார். மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்டார். மூன்று பேரிடமும் சம அளவுள்ள பணத்தைக்; கொடுத்தார்.
அவர்கள் மூன்று பேரும் மூன்று தனித்தனி மாளிகையிலே குடியிருந்தார்கள், அவர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.
“இதோ பாருங்க.உங்க மூன்று பேருக்கும் ஒரே அளவு பணம்தான் கொடுத்திருக்கிறேன்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்றால்… இந்தப் பணத்தைத் கொண்டு நீங்கள் உங்க மாளிகைகளை நிரப்ப வேண்டும். உங்களுக்கு ஏழுநாள் அவகாசம் ஏழுநாளுக்குப் பிறகு வந்து பார்ப்பேன். மாளிகை முழுவதும் மற்ற இரண்டு பேரைக் காட்டிலும் யார் நன்றாக நிரப்பியிருக்கிறீர்களோ.. அந்தப் பிள்ளைதான் தனக்கு பின்னால் அரசனாக வருவான்” என்றார்.
மூன்று பேரும் யோசனை செய்ய ஆரம்பித்தார்கள். கொடுத்திருக்கிற பணமோ ரொம்பக் குறைவு. மாளிகையோ ரொம்பப் பெரிது. என்னத்தை வாங்கிப் போட்டு நிரப்புவது? முதல் இளவரசன் பார்த்தான். நேராக குப்பை அள்ளுகிற இடத்துக்குப் போனான்.
இனிமே ஊருக்கு வெளியே கொண்டுபோய் கொட்டுற வண்டியெல்லாம் என் மாளிகைக்கு வரணும், அங்கே குப்பையைக் கொட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டான்.
இவ்வளவு குறைச்சலான பணத்தைக் கொண்டு மாளிகையை நிரப்ப வேண்டும் என்றால் அதுற்கு இதுதான் வழி என்று முடிவு செய்து விட்டான்.
இரண்டாவது இளவரசன் பார்த்தான். என்ன செய்வது என்று சில பேரை யோசனை கேட்டான்.
உன்னுடைய சகோதரன் குப்பையாலேயே நிரப்பி விட்டான் -அதுமாதிரி ஏதாவது செய்.. நம்ம ஊரிலே புல்தான் ரொம்ப மலிவு… கட்டு கட்டா கொண்டு வந்து போடச் சொல்லு” என்று ஒருத்தர் யோசனை சொன்னார். அது மாதிரியே செய்தான். பாதியளவு நிரப்பினான். பணம் தீர்ந்து போனது!
இதற்குள்ளே ஏழுநாள் முடிந்து விட்டது. ராஜாவும் குருவும் ஒவ்வொரு மாளிகையாக பார்த்துக்கொண்டு வருகிறார்கள். முதல் மாளிகையை நெருங்கவே முடியவில்லை. அவ்வளவு துர்நாற்றம்.
இரண்டாவது மாளிகை.. அழுகிப் போன புல் ….அதுவும் பாதியளவு தான் நிரம்பியிருந்தது.
மூன்றாவது மாளிகைக்குப் போனார்கள்.. அங்கே போய் பார்த்தால் – உள்ளே எதுவுமே இல்லை. ஏற்கனவே? அங்கே இருந்த ஒன்று இரண்டு பொருட்களையும் எடுத்து அப்புறப்படுத்தி இருந்தாங்க. வீடு முழுவதும் காலி. “நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார். “பாருங்க.. அது நிரம்பியிருக்கு!” என்றான் பிள்ளை. ராஜாவுக்குப் புரியவில்லை. கோபம் வந்தது.
குரு சொன்னார்! “கோபப்படதே! வீடு நிரம்பியிருக்கு உனக்கு பழக்கமில்லாத ஓன்றாலே அது நிரம்பியிருக்கு.
உன் பிள்ளை அகல்விளக்குகளை வாங்கி தீபம் ஏற்றி வைத்திருக்கான். மாளிகை முழுவதும் ஒளியால் நிறைந்து இருக்கு” என்றார்.
மன்னர் மனது வெளிச்சமாகியது. இந்த மகனையே இளவரசனாக்கினார்.
இந்தக் காலத்து வாரிசுகள் எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா?
ஒரு பையன் ஒரு வேலையும் செய்யாமலே சோம்பேறித்தனமாக ஈஸிசேரில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு படுத்து இருந்தான்.
அப்பா புத்தி சொல்ல ஆரம்பித்தார். “இப்படி இருந்தா எப்படி? மத்தவங்க மாதிரி சுறுசுறுப்பாக இருக்க வேணாமா?” என்றார். மத்தவங்க எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் பையன்.
“வேலைக்குப் போறாங்க.. உழைக்கிறாங்க!” என்றார். உழைச்சா என்ன கிடைக்கும்?” – என்றான். “பணம் கிடைக்கும்!” – என்றார் அப்பா. பணம் கிடைச்சா என்ன பண்ணலாம்” என்றான். “வீடு கட்டலாம்” என்றார் அப்பா. “வீடு கட்டினா என்ன பண்ணலாம்?” . “சோஃபா, ஈஸி சேர்லாம் வாங்கிப் போடலாம்!” , வாங்கிப் போட்டா? அதுலே கால் மேல் கால் போட்டுக் கிட்டு சுகமா உக்கார்ந்திருக்கலாம்! “இப்பவே நான் அதைத்தானே செய்துக்கொண்டு இருக்கேன்!” என்றான் பையன்.
தென்கச்சி கோ.சுவாமிநாதன்.


