Type to search

Editorial

பொதுமக்களையும் சேர்த்து திட்டமிடல்களைச் செய்யுங்கள்

Share

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பாழ்பட்டுப் போவதற்கு அரச உயர் அதிகாரிகள் சிலரும் – நாங்கள் படித்துப் பட்டம் பெற்ற துறைசார் நிபுணர்கள் என்ற ஆணவச் செருக்குடைய சிலருமே காரணம் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.

உண்மை. அபிவிருத்திக் கட்டுமானங்கள் எங்கள் மண்ணுக்கு விடிவையும் உயர்வையும் தரும் என நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் நமக்குக்கிடைத்த அபிவிருத்தித் திட்டங்களைப் பொருத்தமற்ற முறையில் நிறைவேற்றிவிட, அதனால் மக்கள் பெருந்துயர்பட வேண்டியவர்களாயினர்.

ஆம், வடமாகாணத்தில் அமைக்கப்பட்ட புகையிரதப் பாதைகளை இந்த நாட்டில் எங்கும் இல்லாதவாறு மலையாக்கிவிட, அதனால் மக்களின் வாழ்விடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கலாயின.

இதுபோல யாழ்ப்பாணம் பிறவுண் வீதியை இருபக்கமும் வடிகால் அமைத்து உயர்த்தி விட, பிறவுண் வீதி மக்கள் சீனத்துப் பெருந்துயர்போல மழை வெள்ளம் வீடுகளுக்குள் வருகின்ற துயரை அனுபவிக்கின்றனர்.

இதைவிட, எங்கள் குப்பைகொட்டும் பண்பாட்டின் காரணமாக ஒவ்வொரு மழை காலத்திலும் பிறவுண் வீதியின் வடிகால் மூடிகள் அலவாங்கு கொண்டு தெண்டித் திறந்து; சொப்பிங்பைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் என நானாவிதக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தாகின்றன.

இஃது வீதியை உயர்த்தி அமைத்ததன் உபயமாகக் கிடைக்கப்பெற்றதாகும்.

மேலும் அல்லைப்பிட்டி வடக்குப் பிரதான வீதியில் – ஆளரவமற்ற இடத்தில் – மழைக் காலத்தில் மாரித்தவளைகள் ஓலமிடும் குளத்தில் அரச விருந்தினர் விடுதியைக் கட்டி இப்போது அது பேய் வாழும் இடமாகப் பாழடைந்து கிடக்கிறது.

இவ்வாறு நமக்குக் கிடைத்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும், ஏலவேயிருந்த நிம்மதியைக் குலைத்து ஒருபடி துயரத்தை மேலும் தந்து போவதற்கு மூலகாரணம் துறைசார் நிபுணத்துவம் எதுவும் இல்லாத – உடம்பொடு அழிகின்ற ஆணவச்செருக்கை மட்டும் கொண்ட சிலர் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.

எனவே எதிர்காலத்திலேனும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது; திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் இடங்களில் நீண்ட காலம் வாழ்ந்து வருகின்ற அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாண நகர அபிவிருத்தியில் பொது மக்களின் கருத்துக் களை உள்வாங்கி அவர்களையும் இணைத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தான் யாழ்ப்பாண நகர அபிவிருத்தியையும் நாசப்படுத்தாமல் இருப்பதற்கான ஒரே வழியாகும்.

ஆகையால் இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link