தென்னை வளத்தைப் பாதுகாக்க இந்தியாவின் உதவியை நாடுங்கள்
Share
வடமாகாணத்தின் முதலீடுகளில் தென்னைச் செய்கைக்கான முதலீடுகள் பெருந்தொகையாக இருப்பதை நாம் எவரும் கணித்துப் பார்ப்பதில்லை.
உண்மையில் வடக்கில் யுத்தத்தால் அழிந்த தென்னந்தோட்டங்களை மீள்நடுகை செய்தது மட்டுமன்றி, பற்றைகள் வளர்ந்திருந்த காணிகளைத் திருத்தம் செய்து அங்கும் தென்னங்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
சுருங்கக்கூறின், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கக்கூடிய நம்மவர்கள் வடமாகாணத்தில் மேற்கொண்ட பெருமளவு முதலீடு என்பது தென்னந்தோட்டம் சார்ந்ததாகவே இருக்க முடியும்.
தவிர, வடக்கின் தென்னஞ்செய்கை காரணமாக பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத் துள்ளதுடன் தேங்காய் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வடமாகாணத்துக்குள் ஊடுருவிய வெள்ளை ஈக்கள் இப்போது அனைத்துத் தென்னைகளையும் தாக்கி அழிக்கும் அளவில் பல்கிப் பெருகி உள்ளன.
வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவதன் பொருட்டு ஒரு சில கட்டுப்பாட்டு முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனவாயினும், அவை எதிர்பார்த்த அளவில் வெற்றி அளிக்கவில்லை என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
தவிர, குறித்த கட்டுப்பாட்டு முறைகள் அதிக செலவுடையதாக இருப்பதுடன் அதனை அனைத்து தென்னம் செய்கையாளர்களும் சம நேரத்தில் பின்பற்றுவது சாத்தியமற்றதாக உள்ளது.
இந்நிலையில் பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்து தென்னம் பயிற்செய்கையில் ஈடுபட்டவர்கள் வருமான இழப்பு, தென்னை மரங்கள் அழிந்து போகின்ற அபாயம் என்பவற்றால் மிகவும் நொந்துபோய் உள்ளனர்.
இருந்தும் இது பற்றி அரச தரப்புகள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
ஆக, நம் தமிழர் தாயகத்தில் தென்னைகளைக் கடுமையாகப் பாதித்துள்ள வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை நாட வேண்டிய தேவை உள்ளது.
அதிலும் இந்தியத்துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இருப்பதன் காரணமாக, நம் தமிழர் தாயகத்தை மையப்படுத்தி வெள்ளை ஈககளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவின் ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் எங்கள் தென்னை வளத்தைக் காப்பாற்ற முடியும்.
எனவே இது விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர், தென்னைப் பயிற்செய்கை சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடம் ஆகியன இணைந்து காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்து எங்கள் தென்னை வளத்தைப் பாதுகாக்க உதவுமாறு கேட்க வேண்டும்.
ஆம், தென்னைகளை அதிவேகமாகத் தாக்கி வரும் வெள்ளை ஈக்களை விரைந்து கட்டுப்படுத்தத் தவறுவோமாயின், எங்கள் அருமந்த தென்னை வளம் முற்றற பாதிப்படையும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


