Type to search

Editorial

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்துக்கு என்னாயிற்று?

Share

ஆளுக்கொரு அரசியல் கட்சி, ஆளுக்கொரு அமைப்பு, ஆளுக்கொரு கோயில் என்ப தாக நிலைமை மாறிவருகிறது.

இது ஒரு புறமிருக்க, சில குழப்பவாதிகளின் உபத்திரவம் தாங்க முடியாதென்றாயிற்று.

ஆம், எதற்கெடுத்தாலும் விமர்சனம். எதற் கொடுத்தாலும் எதிர்ப்பு. எதற்கெடுத்தாலும் குதர்க்கம் என்றால், நம் மண்ணில் நல்லது ஏதேனும் நடக்குமா என்ன?

ஆம், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்மொழிவதைத் தனது பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.

அதன் பிரகாரம் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து தீர்வுத் திட்ட நகலைத் தயாரித்தனர்.

இதற்குப் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அறிஞர்கள், சட்டவாளர்கள், அரசியல் புலமை மிக்கவர்கள் தமது காத்திரமான பங்களிப்பை வழங்கினர்.

தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அன்று அதற்கு இருந்த ஆதரவையும் மக்கள் எழுச்சியையும் நினைத்துப் பார்க்கும் போது, எங்கள் தமிழ் மக்களிடம் இருந்த இனப் பற்றுதலையும் நம்பிக்கையையும் நம் அரசியல்வாதிகள் எங்ஙனம் போட்டுடைத்தார்கள் என்பது தெரியவரும்.

என்ன செய்வது தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்த “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி யானது எங்கள் விடுதலைப் போராட்டம் மௌனித்துப்போனதன் பிற்பாடு நம் மண் ணில் நடந்த மிகப் பிரமாண்டமான பேரெழுச் சியாகும்.

இருந்தும் அதையும் நம் கனவான்கள் சிலர்; கீறிக் கிழித்து – கடித்துக் குதறி தங்களின் வஞ்சகத்தனத்தை தீர்த்துக் கொண்டனர்.

அதன் விளைவாக் பெரும் பிரவாகத்துடன் எழுந்த தமிழ் மக்கள் பேரவை அமிழ்ந்து போனது.

இருந்தும் எல்லாரும் ஏறிச் சறுக்கி விழுந்த குதிரையில் நாங்கள் ஏறி ஓடினால், அது எங்களுக்குப் பெருமை என்று நினைத்து சிலர் குதிரை ஏற முயற்சி செய்தனராயினும் ஈற்றில் அந்த முயற்சி அவமானத்துடன் முடிந்து போனது.

நிலைமை இதுவாக இருக்க, இப்போது சிலர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? என்பது பற்றி ஆராய இருப்பதாகக் கேள்வி.

நல்லது காலாகாலமாக இதுபற்றி ஆராயலாம். ஆனால் நம் கேள்வி தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத் திட்ட முன்மொழிவுக்கு என்னவாயிற்று என்பதுதான்.

ஆம், எவரும் எப்போதும் புதிது புதிதாகத் தீர்வுத் திட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால் அதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் – அங்கீகரிக்கமாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link