புதுச்சேரிப்பயணம் 05
Share
புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான கம்பன் விழா 2025 மே 9, 10, 11 ஆகிய மூன்று தினங்கள் இடம்பெற்றன.
முதல் நாள் நிகழ்வு கம்பனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தலுடன் ஆரம்பமாகியது.
அரங்க நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது மனோன்மணியம் சுந்தரனார் பாடிய நீராடும் கடலுடுத்த… என்பதே தமிழ்த் தாய் வாழ்த்தாக இசைக்கப்படும்.
எங்கள் யாழ்ப்பாணத்தில் பாரதியார் இயற்றிய வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி… என்பதே தமிழ்த் தாய் வாழ்த்தாக இருந்தது.
எனினும் தற்போது மனோன்மணியம் சுந்தரனாரின் நீராடும் கடலுடுத்த… என்பது தமிழ் வாழ்த்தாக இங்கும் பாடப்படுகின்ற வழமை வந்துள்ளது.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் பாவேந்தன் பாரதிதாசனின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே… என்ற பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக இசைக்கப்படுகிறது.
இசை வல்லுநர்கள் சேர்ந்து இப்பாடலைப் பாடிய போது, அரங்கிலும் அவையிலும் இருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து பாடியதைக் கண்டுவியந்தேன்.
அதிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், சட்ட சபை உறுப்பினர்களும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர்.
புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தாக உள்ள பாவேந்தன் பாரதிதாசனின் பாடலை நம் வாசகர்கள் அறியும் பொருட்டு அத்தமிழ்த்தாய் வாழ்த்தை இவ்விடத்தில் தருகின்றோம்.
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி
செம்மையைச் செய்பவள் நீயே!
தமிழ்த் தாய் வாழ்த்துடன் கம்பன் விழாவின் முதல்நாள் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புதுவைக் கம்பன் கழகத்தின் தலைவரும் புதுச்சேரி சட்ட சபை உறுப்பினருமான செல்வகணபதி தலைமையுரையாற்ற, மாநில முதலமைச்சர் ந.இரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
தொடக்கவுரையை புதுச்சேரி துணை ஆளுநர் முனைவர் கே.கைலாஷ்நாதன் தமிழில் ஆற்றினார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அவர் தமிழில் தொடக்கவுரையை ஆற்றியமை அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆக, புதுவை மாநில முதல்வர் வரவேற்புரையாற்ற, துணை ஆளுநர் தொடக்கவுரை நிகழ்த்த, கம்பன் விழா ஆரம்பமாகின்ற பெருமை புதுச்சேரிக் கம்பன் கழகத்திற்கு மட்டுமே உண்டு எனலாம்.
முதல்நாள் காலை அமர்வு இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் வி.இராமசுப்பிரமணியன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 2024 ஆம் ஆண்டுக் கம்பன் விழாவின் நிகழ்வுகளை உள்ளடக்கிய கம்பன் விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. கூடவே அறக்கட்டளை விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் கம்ப காவலர் வழக்குரைஞர் முருகேசன் பானுமதி அறக்கட்டளைப் பரிசு அடியேனுக்குக் கிடைக்கப் பெற்றது.
இதனை புதுவை மாநிலப் பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி வைத்தார்.
தொடரும்…


