Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 06

Share

புதுச்சேரிக் கம்பன் விழாவின் முதல்நாள் காலை அமர்வானது விழா மலர் வெளியீடு, விருதுகள் வழங்கிக் கௌரவித்தல், வழக்கறிஞர் த.இராமலிங்கம் அவர்களின் கம்பன் தமிழ் நூல் வெளியீடு, கம்பன் கழகம் நடத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் என்ற நிகழ்வுகளுடன் எழிலுரையும் இடம்பெற்றது.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ‘அறம் வளர்த்தோன்’ எனும் பொருளில் எழிலுரையாற்றினார்.

சபை நிறைந்த மக்கள் கூட்டம். மிகவும் அமைதியாக இருந்து கம்பவாரிதியின் பேச்சை கேட்டு இன்புற்றனர்.

உரை முடிவில் கம்பவாரிதி மேடையால் இறங்கிய போது, சபையிலிருந்த பேராளர்கள் முதற்கொண்டு சாமானிய மக்கள் வரை கம்பவாரிதியின் உரையைப் பாராட்டுவதிலும் அவரின் ஆசி பெறுவதிலும் முண்டியடித்ததைக் கண்டு மகிழ்ந்தேன்.

பொதுவில் புதுச்சேரி கம்பன் விழாவின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏலவே நிறுவப்பட்ட அறக்கட்டளைகள் மூலமே இடம்பெறும்.

குறித்த அறக்கட்டளை தனக்குரித்தான நிகழ்வுக்குரிய செலவை ஏற்றுக்கொள்ளும்.

தவிர, விழா அழைப்பிதழில் நிகழ்ச்சி அமைப்பு என்ற உபதலைப்பு இடப்படுவதுடன் முன்னிலை என்ற சொற்பதமும் அழைப்பிதழில் இடம்பெற்றிருக்கும்.

இங்கு கம்பவாரிதி ஆற்றிய எழிலுரை என்ற நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் திருமிகு திருநாவுக்கரசு ராஜேஸ்வரி அறக்கட்டளை பொறுப்பேற்றிருந்தது.

அந்த அறக்கட்டளையை நிறுவிய சி.பி.திருநாவுக்கரசு அவர்கள் கம்பவாரிதி பேசுகின்ற போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார். இதுவே முன்னிலை என்ற சொற்பதத்தின் பொருளாகும்.

இதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஒவ்வொரு அறக்கட்டளை பொறுப்பாக வுள்ளன.

அந்த அறக்கட்டளையின் நிறுவுநர் நிகழ்வு நடை பெறும் போது மேடையில் அமர்ந்திருக்கின்ற ஏற்பாடுகளும் உண்டு.

அந்தவகையில் புதுவைக் கம்பன் கழகம், விழாச்செலவுகளை மிகநுட்பமான முறையில் ஈடு செய்துகொள்வதைக் காணமுடிகிறது.

அறக்கட்டளை நிறுவுநர்களை மேடையில் அமரவைத்து அவர்கள் முன்னிலையில் அந்த நிகழ்வு இடம் பெறுவதான ஏற்பாடு, அறக்கட்டளை நிறுவுநர்களை திருப்திப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருந்தது.

அதேநேரம் அறக்கட்டளைகளை நிறுவியவர்கள் மிகப்பெரும் தனவந்தர்களாகவும் வர்த்தகப் பேராளர்களாகவும் உள்ளனர் என்ற உண்மையையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

இதையும் கடந்து, விழாவில் கலந்து கொள்ளும் பேராளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மதியம் மற்றும் இராப்போசனங்களை சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளே பொறுப் பேற்றுக்கொள்ளும்.

ஒவ்வொரு நிகழ்வின் நிறைவிலும் மதிய போசன அழைப்பு, இராப்போசன அழைப்பை சம்பந்தப்பட்ட அறக்கட்டளையினர் சபையில் வழங்கி விருந்துக்கு வாருங்கள் என அழைக்கின்ற சிறப்பம்சத்தையும் அங்கு காணமுடிந்தது.

இந்த நடைமுறை கொழும்புக் கம்பன் கழகத்திலும் இருப்பதை இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

பாண்டிச்சேரி என்று பிரான்சிய ஆட்சியாளர்களால் அழைக்கப்பட்ட புதுச்சேரி, மிகப் பிரமாண்டமான விடுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அதிலும் புதுச்சேரி நகராட்சியில் அடுத்தடுத்து பிரமாண்டமான விடுதிகள்.

அந்த விடுதிகளிலேயே மதியம் மற்றும் இராப்போசனம் ஒழுங்குபடுத்தப்படும்.

எங்கள் யாழ்ப்பாணத்தைப் போல வட்ட மேசையில் குந்தியிருக்கின்ற ஏற்பாடுகள் அங்கு இல்லை.

மிக நீண்டதும் அகண்ட துமான மண்டபத்தில் நீள் மேசைகளும் கதிரைகளும் அடுக்கப்பட்டிருக்கும். அந்த சாப்பாட்டு மேசைக்கு வெள்ளை விரிப்புக்கள் கிடையாது.

மாறாக, நியூஸ் பிறிண்ட் எனப்படும் பத்திரிகைகள் அச்சிடப்படும் தாள் நீளமாக விரிக்கப்படும். அதன்மேல் வாழை இலைகள்.

இங்கு எத்தனை ஆயிரம் பேர் சபையில் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தலை வாழை இலைகளே பரிமாறப்படும்.

தவிர, பந்தி வைக்கின்ற நடைமுறை இன்னமும் அங்கு பின்பற்றப்படுகிறது.

வகைவகையான உணவுகள் தொடர்ச்சியாக வைக்கப்படும்.

இனிப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த உணவுப் பரிமாற்றம் அடேங்கப்பா என்று வியக்கச் செய்யும்.

இதில் தயிர், ஊறுகாய் கட்டாயமானது. அதிலும் இராப்போசனத்தின் போதும் வாழை இலையின் ஒரு மூலையில் ஊறுகாய் வைக்கப்பட்டிருக்கும். கூடவே உப்புத் தூளும் அதன் அருகே வைக்கப்படும்.

உணவு வகைகளைப் பட்டியல் படுத்துவதோ அன்றி கறிவகைகளை இனங்காண் பதோ எங்களைப் பொறுத்தவரை முடியாத காரியம்.

ஆம், நாங்கள் யாழ்ப்பாணத்தில் மிளகாய்த் தூளை கொட்டி வைக்கின்ற குழம்பு அங்கு கிடையவே கிடையாது.

மாறாக மல்லி, நற்சீரகம், பெருஞ்சீரகம் உள்ளிட்ட மாசாலாப்பொடி சேர்க்கப்பட்ட கறிவகைகள். அதிலும் காய்கறிகள் திண்மமாக இருப்பதில்லை. எல்லாமுமே கரைசல் ஆக்கப்பட்டு விடும்.

விடுதியின் நுழைவாயிலில் விருந்து கொடுக்கின்றவர்களின் குடும்பத்தினர் நின்று, விருந்துக்கு வருகின்றவர்களை இருகரம் கூப்பி வரவேற்கின்ற பண்பாடு உண்மை யிலேயே மெய்ச்சுதற்குரியது.

அதிலும் அவர்கள் அனை வரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சேர்ட் அணிந்திரு ப்பதன் காரணமாக அந்த இடம் ஒரு விழாவுக்குரிய சிறப்பைப் பெற்றிருக்கும்.

விருந்து நிறைவுற்றதும் வாழை இலைகளை ஒவ் வொன்றாக எடுப்பதில்லை. மாறாக ஏலவே விரிக்கப்பட்ட பத்திரிகை அச்சிடும் தாளை அப்படியே இலைகளோடு சேர்த்து மடித்து எடுப்பர்.

அதைப் பார்க்கும் போது மிகவும் விருப்பமாஏகவும் வியப்பாகவும் இருக்கும். மீளவும் பந்திப்பரிமாற்றத்த ற்காக அச்சிடும் தாள் மேசையில் நீளமாக விரிக்கப்படும்.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link