Type to search

Articles புதுச்சேரிப்பயணம்

புதுச்சேரிப்பயணம் 01

Share

ஒரு காலத்தில் பயணக் கட்டுரைகள் நம் மக்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றிருந்தன.

ஆனந்தவிகடனில் மணியன் எழுதுகின்ற பயணக் கட்டுரைகளுக்கு இருந்த மவுசை என்ன வென்று சொல்வது. இப்போதெல்லாம் பயணக்கட்டுரைகள் நாம் மறந்தவற்றுள் ஒன்றாகிவிட்டன.

உண்மை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகவலைத் தளங்களின் ஊடுருவலும் சேர்ந்து பத்திரிகைகள், சஞ்சிகைகளை அலங்கரித்த பயணக்கட்டுரைகளுக்கு சமாதி கட்டிவிட்டன.

இருந்தும் புதுச்சேரி பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்ற நினைப்பிற்குள் புதுச்சேரி மாநிலத்தின் கட்டமைப்பும் அவ்வாறானதொரு மாநிலம் கூட எங்களுக்கு இல்லாமல் போனதே என்ற ஆதங்கமும் சேர்ந்து கொண்டன.

இதையும் கடந்து புதுச்சேரியில் எங்கள் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு இருக்கக்கூடிய அளப்பரிய மதிப்பும் மரியாதையும் கண்டு வியந்ததன் விளைவாகவும் புதுச்சேரிப் பயணக்கட்டுரையை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தருளியது.

இனிப் புதுச்சேரிக்குப் போகலாம்.

புதுச்சேரி

அந்நியர்களின் ஆட்சிக்கு இலங்கை மட்டுமல்ல, இந்தியாவும் ஆட்பட்டது. எனினும் இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்ற இனத்துவம் காலத்திற்கு காலம் ஆட்சி செய்ததைப் போல இந்தியாவின் நிலைமை இருக்கவில்லை.

மாறாக, இந்தியப் பிராந்தியங்களில் வெவ்வேறு காலனித்துவ நாடுகளின் ஆதிக் கங்கள் இருந்தன.

குறிப்பாக தமிழகத்தில் பிரிட்டிசாரின் ஆட்சி இருந்த அதேநேரம், புதுச்சேரிப் பிராந்தியம் பிரான்ஸ் நாட்டின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஆட்சியில் புதுச்சேரி (puducherry) பாண்டிச்சேரி (Pandicherry) என்றே அழைக்கப்பட்டது.

1947 ஓகஸ்ட் 15 இல் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த போதும் புதுச்சேரி பிரான்ஸின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இயங்கியது.

1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி புதுச்சேரியை பிரதிநிதித்துவப்படுத்தும் பஞ்சாயத் துக்களில் இருந்து 178 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 170 பேர் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதன் காரணமாக 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி புதுச்சேரிக்கு விடுதலை வழங்கப்பட்டது. இத்தினமே புதுச்சேரி மாநிலத்தின் சுதந்திர தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பிரான்ஸின் ஆட்சி அதிகாரத்திற்குள் இருந்த புதுச்சேரி 1962இல் யூனியன் பிரதேசமாக இந்திய மத்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

முழுக்க முழுக்கத் தமிழ் மக்கள் வாழ்கின்ற புதுச்சேரியை தமிழ் நாட்டுடன் இணைப்பதற்கு தமிழக அரசுகள் கடும் பிரயத்தனம் எடுத்த போதிலும் அதனை புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் சுமார் இருபது இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட புதுச்சேரி தனித்துவமான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டமைந்த மாநிலமாக இயங்கி வரு கிறது.

ஆம், புதுச்சேரி மாநிலத்தில் இறங்கி, அதன் வரலாற்றை அறிந்த போது எங்கள் தமிழர் தாயகமும் இப்படியொரு மாநிலமாக ஆக்கப்பட்டிருந்தால், நம் தமிழ் மக்களும் நிம்மதியாக இருந்திருக்க முடியுமே என்ற நினைப்பு எம்மை ஆட்கொள்ள, புதுச்சேரி மாநிலத்தை அலங்கரித்து நிற்கும் மிகப்பழமை வாய்ந்த வானுயர் கட்டிடங்களை அண்ணார்ந்து பார்த்தோம்.

அதற்குள் கட்டடங்களின் உயரம் மட்டுமல்ல, எங்களின் வெறுமையும் வானத்தை நோக்கி இறைவா! எங்களை மட்டும் ஏன் இப்படிச் செய்தால் என்று நினைக்க வைத்தது.

புதுச்சேரியின் விஸ்தீரணம்

பாண்டி அல்லது புதுவை எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட புதுச்சேரி மாநிலம் 2006 ஆம் ஆண்டில் இருந்தே புதுச்சேரி எனப் பெயர் சூட்டப்பட்டது.

19.54 KM-2 நில அளவைக் கொண்டமைந்த இந்த மாநிலத்திற்குள்ளேயே நாகபட்டி னத்திற்கு அருகாமையில் உள்ள காரைக்கால் நகரும் கேரள மாநிலத்தின் கோழிக் கோட்டிற்கு அருகில் உள்ள மாஹேநகரும் அடங்குகின்றன.

சுமார் 20 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த மாநிலத்தின் அரச அலுவல்கள் மொழியாக தமிழும் ஆங்கிலமும் இருப்பதுடன் கூடுதல் அலுவலக மொழியாக பிரெஞ்சு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதுச்சேரி மாநில மக்களின் மொழிநடைப் பிரயோகத்தில் பிரஞ்சுமொழிக் கலப்பு இருப்பதும் இங்கு சுட்டுதற்குரியது.

தொடரும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link