Type to search

Articles வியாசர் பதில்கள்

வியாசர் பதில்கள்

Share

1) இன்ப அதிர்ச்சி என்பது…?

தேவா-இணுவில்

இருதய நோயாளி ஒருவருக்கு லொற்றியில் ஒரு கோடி ரூபாய் வீழ்ந்து விட்டது. இதை அவருக்குக் கூறினால் அதிர்ச்சியில் ஏதும் நடந்து விடும் என்று, ஒரு மனநல வைத்தியரிடம் விடயத்தைக் கூறி இதைத் தந்தையிடம் கூறச் சொல்லினர் அவரின் பிள்ளைகள்.

வைத்தியரும் மெதுவாக உங்களுக்கு லொற்றியில் பத்து இலட்சம் வீழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க, அதற்கு அவர், எனது பிள்ளைகளுக்கு அதைப் பகிர்ந்த ளிப்பேன் என்றார்.

இருபது இலட்சம் வீழ்ந்தால் பிள்ளைகளு க்கும் கொடுத்து மிகுதியை எனது வங்கியில் போட்டு வைப்பேன்.

உடனேயே வைத்தியர் கேட்டார் ஒரு கோடி வீழ்ந்தால் என்று, அதற்கு ஐம்பது இலட்சத்தை உங்களிடம் தந்து விடுவேன் டாக்டர் என்றார் அவர்.

அவ்வளவு தான் வைத்தியர் மயங்கி சரிந்தார்.

2)பராபவ வருடம் எந்த வைத்தியசாலை யில் பிறந்திருக்கிறது வியாசரே?

தவராஜன்-கொற்றாவத்தை

க டந்த வருடமும் இதே கேள்வியைக் கேட்டீர்கள். இந்த வருடமும் அதே கேள்வியைக் கேட்கீறீர்கள்.

இதற்கான பதில் இருந்தால் நீங்களே சொல்லுங்களேன் பிளீஸ்.

3)இப்போதைய பெண்களை திருமணம் ஆனவரா? ஆகாதவரா என்று கண்டுபிடிக்க முடியவில்லையே?

ஜெ.ஜெ-யாழ்ப்பாணம்

முன்னைய காலங்களில் திருமணமான பெண் தாலி கட்டியிருப்பது போல திருமணமான ஆண் காலில் மெட்டி போட வேண்டும்.

அதாவது, தலை நிமிர்ந்து நடந்து வரும் ஆடவனுக்கு அவளின் கழுத்திலிருக்கும் தாலி, அவள் திருமணமானவள் என்பதையும் தலை குனிந்து வரும் பெண்ணுக்கு ஆடவனின் காலிலிருக்கும் மெட்டி அவனுக்கு திருமணமாகி விட்டதென்ற செய்தியைச் சொல்வதாய் இருக்கும்.

ஆனால் இப்போதைய நிலை அவ்வாறில்லையே.

தாலியுமில்லை. மெட்டியுமில்லை. தறுதலை தான் மிச்சமாகவிருக்கிறது.

4)தேர்தல் வெற்றிக்காக தேவாலயத்தில் குண்டு வைத்தவர்கள் போரில் வெற்றி பெற என்னென்னவற்றையயல்லாம் செய்திருப்பார்கள்?

சுதன்-குப்பிளான்

இறுதி யுத்தத்தில் கண்கண்ட காட்சியை ஒருவர் சொல்லி அழுதார் என்னிடம்.

ஆம், முள்ளிவாய்க்காலில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்.

அப்பாவிப் பொது மக்கள் உயிரைக் காப்பாற்ற சிதறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மரத்தடியில் செல்லடியில் வயிறு வெட்டுப்பட்டு குடல் வெளியே வந்தபடி என்னைக் காப்பாற்றுங்கள் என ஒரு இளைஞன் அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அவனைக் காப்பாற்ற வேண்டும் போல இருந்தது. ஆனாலும் அங்கு எந்த மருத்துவ வசதியும் இருக்கவில்லை.

சற்று நேரத்தில் அந்த இளைஞனின் குரல் அடங்கிப் போனது.

5)மனம் வருத்தமாக இருந்தால் என்ன செய்வது வியாசரே?

தர்மதன்-மந்துவில்

அழுது விடுங்கள். அழுகையைப் போல மருந்து இந்த உலகில் எங்கேயுமில்லை.

ஆம், அழுகையைக் கட்டுப்படுத்தினால் அது மன இறுக்கத்தை ஏற்படுத்தும். மன இறுக்கம் தொடர்ந்தால் அது மன அழுத்தமாகும்.

மன அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

ஆதலால் மனம் கனமாக இருக்கும் போது அழுது விடுங்கள். கண்ணீர் உங்கள் காயத்தை ஆற்றி விடும்.

6)கடந்த காலங்களை விட இம்முறை பட் டாசு விபத்துக்கள் குறைவென்று சுகாதாரத் துறையினர் கூறியிருக்கின்றனரே. என்ன காரணம்?

சிவயோகன்-புளியங்குளம்

இம் முறை பட்டாசுப் பயன்பாடு குறைவு. ஆதலால் விபத்துக்களும் குறைவு.

இதற்குக் காரணம் மக்களிடம் பணம் இல்லை. புதுவருடத்துக்காக பலகாரம், கைவிசேடம், புத்தாடை, பட்டாசு இந்த நான்கில் முதல் முன்றும் முக்கியமாகிவிட பட்டாசு தேவையற்றதாகி விட்டது.

இதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. பட்டாசு வெடிப்பினால் சூழல் மாசுபடுகிறது. இப்போது அது குறைந்துள்ளது மகிழ்வுக்குரியதே.

7)வியாசரே எனக்குத் தனிமையில் இருக்கப் பிடித்திருக்கிறது. அது தவறா வியாசரே?

இந்து-மந்துவில்

இந்து ஒருவருக்கு எப்போதாவது தனிமையில் இருக்க வேண்டும் போலிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் எப்போதும் தனிமையில் இருக்க வேண்டும் போலிருந்தால் மனரீதியில் பாதிப் படைந்திருக்கிறீர்கள் என்றே பொருள்.

அடுத்த கதை பேசாது மருத்துவரை நாடுவது சாலச் சிறந்தது.

அவர் கூறும் அறிவுரைப்படி நடவுங்கள். நீங்கள் சாதாரண நிலைக்கு வந்து விடு வீர்கள்.

8)விழிப்புணர்வில்லாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறதே வியாசரே?

தமிழ்-யாழ்ப்பாணம்

தன் தாய் நிலத்தின் ஒரு பிடி மண்ணைக் கூட எதிரியிடம் விட்டு விட முடியாது என்ற கொள்கையுறுதியுடன் தம் இந்நுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்களின் தம்பி, தங்கையரா இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் ரண மாகிறது.

எது எப்படியோ அடுத்த தலைமுறைக்கு ஈழப் போராட்ட சிந்தனை இருக்கக் கூடாது என்ற எதிரியின் சிந்தனை வெற்றி பெற்று விட்டது என்பது தான் வருத்தமான உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link