Type to search

Articles தரிசனம்

தரிசனம்

Share

யாழ்.போதனா வைத்தியசாலை 7

பொதுவில் அரச நிறுவனங்கள் உட்பட எந்த நிறுவனங்களிலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது, அந்த நிறுவனங்களில் பணி யாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யாமல் இருப்பதாகும்.

அதாவது ஊழியர்கள் சிலர் கடமை உணர்வோடு தமது பணியை சிறப்பாகச் செய்ய; இன்னும் சில ஊழியர்கள் தமக்கான கடமையைச் செய்யாமல் கையடக்கத் தொலைபேசிக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டோ அல்லது வேறு விதமாகவோ காலத்தைக் கடத்துகின்றனர்.

தவிர, யார் விசுவாசமாக வேலை செய்கிறார்களோ அவர்களிடமே எல்லா வேலைகளையும் நிர்வாகங்கள் ஒப்படைத்து விடுகின்ற நிலைமைகளும் உண்டு. உண்மையில் இஃது முகாமைத்துவத்திற்கு ஏற்ற தன்று.

ஆம், சில ஊழியர்கள் விசுவாசமாக வேலை செய்யும் போது, ஏனையவர்கள் வேலை செய்யாமல் தட்டிக் கழிப்பவர்களாக இருந்தால், இஃது வேலை செய்கின்றவர்களை வேலை செய்யாமல் தடுக்கும் அல்லது வேலை செய்கின்றவர்களுக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்தும்.

இந்த நிலைமையை யாழ். போதனா வைத்தியசாலையில் காணமுடிகிறது.

ஆம், குறிப்பாக சிற்றூழியர் தரத்தில் இருக்கக்கூடிய பணியாளர்களில் ஒரு பகுதியினர் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு தாம் எடுக்கின்ற வேதனத்திற்கு ஏற்ப மனச்சாட்சியாக வேலை செய்ய, இன்னும் சிலர் பொறுப்பற்றவர்களாக வேண்டா வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.

இத்தகையவர்களால் பொதுமக்கள் மிகுந்த மனச்சஞ்சலங்களை அனுபவிக்கி ன்றனர்.

இங்குதான் குறித்த பிரிவுகளுக்கு-பணியாளர்களுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய பகுதித் தலைவர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

எனினும் சற்றுச் சண்டித்த னமான ஊழியர்களின் வேண்டா வெறுப்புத்தனத்தை பகுதித் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் இளகிய பணியாளர்களிடம் துள்ளிக் குதிப்பதுமான நடை முறைகளும் உண்டு.

ஆக, யாழ்.போதனாவைத்தியசாலையில் பணியாற்றுகின்ற அத்தனை பணியாளர்களும் தங்களின் பெயர்களையும் பதவிகளையும் தேவையாயின் அவர்களுக்கென வைத்தியசாலை நிர்வாகத்தால் வழங்கப்படக்கூடிய இலக்கங்களையும் உள்ளடக்கிய விபரங்கள் அவர்களின் சீருடைகளில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதனை நடைமுறைப்படுத்துகின்ற போது, குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் யாரேனும் நோயாளர்களுடன் சீறிச்சினந்து கொள்வார்களாயின், அவர்களை இனங்காண்பதும், அது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்துவதும் சுலபமாக இருக்கும்.

இதற்கும் மேலாக, சிறப்பாகப் பணியாற்றுகின்ற வைத்தியசாலை சிற்றூழியர்களின் பெருந்தன்மையை நிர்வாகத்திற்கு எடுத்துக் கூறுவதற்கும் அவர்களைப் பாராட்டுவத ற்கும் இவ் அடையாளப்படுத்தல் அவசியமாகிறது.

எனவே இது விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.

இது ஒருபுறமிருக்க, ஏதேனும் தேவைப்பாடு கருதி விடுதியில் இருந்து இன்னொரு அலுவலகத்திற்குச் செல்கின்ற சிற்றூழியர்களில் ஒரு பகுதியினர் அந்த அலுவலோடு நீண்ட நேரங்களைச் செலவிடுகின்ற நிலைமைகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருக்கவே செய்கிறது.

எனவே ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் குறித்த சிற்றூழியர் தனக்குரித்தான விடுதிக்கு வந்துவிட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்துவது அவசியம்.

பொதுமக்களின் கருத்து நிலை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நம் மரியாதைக்குரிய பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், இதர உத்தியோகத்தர்கள் எனப்பலர் உளர்.

நாம் மட்டுமல்ல பொது மக்கள் மத்தியிலும் மிகவும் மரியாதைக்குரியவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளனர் என்பது மறுதலிக்க முடியாத உண்மை. இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டே தரிசனத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.

இந்த முன்வைப்புக்கள் யாரிலும் குறை காண்பதற்காகவோ அன்றி குற்றம் சாட்டுவதற்காகவோ அல்ல.

மாறாக, குறை குற்றம் களைந்து நிறைவான சேவைகளை எங்கள் யாழ். போதனா வைத்தியசாலை தர வேண்டும் என்பது தான் தரிசனத்தின் நோக்கம் என்பதை திரிகரண சுத்தியோடு கூறிக் கொள்கின்றோம்.

ஆம், யாழ்.போதனா வைத்தியசாலையில் நிலவக்கூடிய சில குறைபாடுகளை வைத்தியசாலை நிர்வாகம் அறிந்துள்ளது.

ஆனால், வைத்தியசாலை நிர்வாகம் அறியாத-அதே நேரம் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற விடயங்களும் உள்ளன. அவற்றை இங்கு முன்வைப்பதன் மூலம் ஒரு செம்மையான தீர்வைக்காண முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் அதை இங்கு தருகின்றோம்.

அந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போது அல்லது இடமாற்றம் பெறுகின்ற போது அல்லது ஒரு வைத்திய நிபுணர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமை ஏற்று சில நாட்களில் அல்லது சில வாரங்களில் இங்கிருந்து வெளியேறும் போது, அது தொடர்பில் பொது மக்களின் கருத்துக்கள் எவ்வாறாக உள்ளன என்பதை உற்றுக்கவனிக்கும் போதுதான், அதற்கான பரிகாரத்தை நிர்வாகத்தால் காணமுடியும் என்பதால் அது பற்றிப் பார்க்கலாம்.

தொடரும்…

Previous Article
Next Article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link