தரிசனம்
Share
யாழ்.போதனா வைத்தியசாலை 8
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுவருகின்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற மருத்துவ நிபுணர்கள் தொடர்பில் பொதுமக்கள் தரப்பில் இருக்கக்கூடிய கருத்தியல் பற்றிக் கவனத்தில் எடுப்பது மிகவும் முக்கியமானது.
அதாவது, ஒரு மருத்துவ நிபுணர் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையேற்று சில வாரங்களில்-சில மாதங்களில் இடமாற்றம் பெற்று அல்லது வெளிநாடுகளுக்குச் செல்கின்ற நிலைமைகளும் உண்டு.
அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்ற போது, யாழ்.போதனா வைத்தி யசாலையில் அவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை-சமாந்தரமான மருத்துவ நிபுணர்கள் அவர்களுக்குக் கடுமையான இடர்களைக் கொடுத்தனர். அதன் காரணமாகவே குறித்த மருத்துவ நிபுணர்கள் வந்த கையோடு வெளியேற வேண்டிய தாயிற்று என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உண்டு.
பிரஸ்தாப குற்றச்சாட்டுக்களில் இருக்கக்கூடிய உண்மைத்தன்மை என்பதற்கு அப்பால், குறித்த தகவல் யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்தே கசிந்தன என்பதும் பொதுமக்கள் அது பற்றி சிலாகிக்கின்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.
இவற்றைக் கூறுகின்ற போது, நீங்கள் பொதுப்படையாக எழுதுவது நியாயமன்று. நீங்கள் குறிப்பிடுவது போல சம்பவங்கள் நடந்திருந்தால், அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒருசில உதாரணங்களை யேனும் இங்கு முன்வைக்க வேண்டும் என்ற கருத்தை யாரேனும் கொண்டிருப்பார்களாயின் அதில் நியாயமுண்டு.
அத்தகையவர்களின் நியாயமான கருத்துத் தொடர்பில் ஒரு சில உதாரணங்களை இங்கு தருவது நம் கடமை.
ஆம், அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷ்ரப் மெமோறியல் வைத்தியசாலையில் முறிவு நெறிவு வைத்திய நிபுணராக இருந்த மருத்துவர் காண்டீபன் அவர்கள் விரு ப்பத்தோடு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்திருந்தார் என்றும் ஆனால் இங்கு அவருக்குக் கடுமையான இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டதனால், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் என்பதுமான விடயம் நம் மக்கள் மத்தியிலும் வைத்தியசாலையுடன் தொடர்புபட்ட தரப்புக்களாலும் பரவலாகப் பேசப்பட்டது.
இது போல, நரம்பியல் நிபுணர் மருத்துவர் ஜீவகன்; ஐயா! சாமி போதும். வேண்டாம் என்று இங்கிருந்து வெளிக்கிட்டு விட்டார் என்ற தகவல்களும் உண்டு.
இவை தொடர்பில் இருக்கக்கூடிய உண்மைத் தன்மைகளை ஆய்ந்து மெய்பொருள் காண்பது தான் அறிவுடைமையாக இருந்தாலும் பொதுமக்கள்-சம்பந்தப்பட்ட நோயாளர்கள் அது பற்றிப் பொது வெளியில் சம்பாசிக்கும் போது, அதனைச் செவிமடுக்கின்றவர்கள் இயல்பாகக் கோபம் கொள்வதற்கு வாய்ப்புண்டு. இதில் தவறுண்டு என விவாதிப்பது பொருத்தமற்றது.
எனவே இதுவிடயத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஏனெனில் பொதுமக்களால் பொது வெளியில் பேசப்படுகின்ற பிரஸ்தாப விட யங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையின் பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்தவல்லது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடலாகாது.
நோயாளர்களை பார்வையிடுதல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பார்வையாளர் நேரத்தில் நோயா ளர்களைப் பார்வையிடுவது, பார்வையாளர்களை மட்டுப்படுத்தும் பொருட்டு பாஸ் நடைமுறையைப் பின்பற்றுவது என்பன நீண்ட நெடுங்காலமாக இருக்கின்ற நடை முறை.
இந்த நடைமுறை தேவையானது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
எனினும் எழுதாத யாப்புப் போல, ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்ட ஒரு நோயாளி தொடர்பில் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நோயாளியைக் காப்பாற்றுவது இனிக் கடினம் என மருத்துவர்கள் கைவிரிக்கும் போது, பிரஸ்தாப நோயாளியை அவரது உற்ற உறவுகள் உயிரோடு பார்ப்பதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அதில் நியாயமும் தர்மமும் உண்டு.
உண்மையில் இத்தகைய விசேட ஏற்பாடுகளை அமுலாக்கும் போது, தனியார் வைத்தியசாலையில் கிடைக்கக் கூடிய சில விசேட வசதிகள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் உண்டு என்பதாக நிலைமை மாறும்.
இத்தகைய நிலைமையானது, யாழ்.போதனா வைத்தியசாலையை நாடுவது தான் நல்லது என்ற நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
இஃது ஒரு சிறந்த முகாமைத்துவத்திற்கு அவசியமானது என்பதை யாரும் நிராகரித்து விடாதீர்கள்.
தொடரும்…


