Type to search

Editorial Headlines

எடுத்த களவை பிடிக்கப் போகிறார்கள் என்றொரு முறைப்பாடு செய்தால்…

Share

இந்த நாட்டில் இருந்து இனவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் ஒருபோதும் ஒழித் துக்கட்ட முடியாது என்பது இப்போது நிரூபண மாகியுள்ளது.

ஆம், தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரை காரணமாக அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தையிட்டி விகாரை, கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று (17) இடம்பெற்றன.

பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அங்கு சென்றபோது, அளவீடு செய்வதை பலாலி பொலிஸார் தடை செய்துள்ளனர்.

அவ்வாறு பலாலி பொலிஸார் தடை செய்வ தற்குக் காரணம்; தையிட்டியில் காணி அளவீடு செய்வதைத் தடுத்து நிறுத்துமாறு தையிட்டி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு எனத் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி இருக்கிறது நிலைமை என்று பார்த்தீர்களா? ஆம், பொதுமக்களின் காணிகளை அபகரித்து எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது தான் தையிட்டி விகாரை.

இப்போது அந்த விகாரையின் விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில், விகாரைக்குரிய காணிகளை நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்யவுள்ளது. இதைத் தடுத்து நிறுத்துங்கள் என முறைப்பாடு செய்ய,

அதனை ஏற்றுக் கொண்ட பலாலி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நில அளவைப் பணிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இங்குதான் பௌத்த மதவாதத்தில் பலாலி பொலிஸ் நிலையம் முழுமையாக அமிழ்ந்து கிடப்பது தெரிகிறது.

ஆம், காணி அளவீட்டைத் தடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்குச் சென்ற விகாராதிபதியிடம்; விகாரையின் காணி உறுதி, விகாரை கட்டப்பட்டதற்கான அனுமதி, விகாரை அபகரித்து வைத்துள்ள காணிகளின் பத்திரங்கள், அவற்றுக்கான நிலஅளவை வரைபடங்கள் என்பவற்றைப் பொலிஸார் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவை எதனையும் கேட்காத பொலிஸார் பௌத்த பிக்கு என்றதும் எழுந்து நின்று அவரின் முறைப்பாட்டை பதிவு செய்து நில அளவையைத் தடுத்துள்ளனர்.

இதைப் பார்க்கும்போது, நான் களவெடுத்த பொருளை – காணியை உரியவர்கள் என்னிடம் இருந்து எடுக்க வருகிறார்கள். எனவே நான் களவாக எடுத்த அந்த சொத்துக்கள் எனக்கே உரித்தானவை.

எனவே நான் அபகரித்து வைத்திருப்பவற்றை உரியவர்கள் பெற்றுக் கொள்ளாமல், பொலிஸார் பாதுகாத்துத்தர வேண்டும் எனக் கேட்பதுபோல இருக்கிறது அந்த முறைப்பாடு.

என்ன செய்வது இனவாதம் மதவாதம் கோலோச்சும் பொலிஸ் திணைக்களத்தால் இந்த நாட்டில் சமாதானத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்பது இதனூடு சத்தியமான உண்மையாயிற்று.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link