Type to search

Headlines Local News News

ஊடக சுதந்திரம் : இலங்கை 134-வது இடத்திற்கு முன்னேற்றம்!

Share

2026 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர சுட்டெண்ணில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறி, 180 நாடுகளில் 134 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் இலங்கையின் உலகளாவிய புள்ளி 40.77 ஆகும்.

எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் 139 வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. RSF இன் கூற்றுப்படி, இலங்கையின் ஊடக சுதந்திரப் பிரச்சினைகள் 2009 வரை நீடித்த உள்நாட்டுப் போருடனும், தமிழ் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட போது பல ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட தண்டிக்கப்படாத வன்முறை குற்றங்களுடனும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.

22 மில்லியன் மக்கள் வாழும் இந்நாட்டில் இதழியல் இன்னும் ஆபத்திலேயே இருப்பதாக RSF கூறுகிறது. ஊடக நிலப்பரப்பில் பன்முகத்தன்மை இல்லாமை, ஊடகங்கள் சிலரிடமே குவிந்து காணப்படுதல் மற்றும் முக்கிய அரசியல் குடும்பங்களில் தங்கியிருக்கும் நிலை ஆகியவை இதற்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எல்லைகளற்ற செய்தியாளர்களின் உலக ஊடக சுதந்திர சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக, உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஊடக சுதந்திரத்தில் “கடினமான” (difficult) அல்லது “மிகவும் பாரதூரமான” (very serious) பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளில், சுட்டெண்ணில் ஆய்வு செய்யப்பட்ட 180 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் சராசரி புள்ளி இவ்வளவு குறைவாக இருந்ததில்லை. 2001 ஆம் ஆண்டு முதல், குறிப்பாக தேசிய பாதுகாப்பு கொள்கைகளுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டுச் சட்டங்களின் விரிவாக்கம், ஜனநாயக நாடுகளிலும் கூட தகவல் அறியும் உரிமையை படிப்படியாக சிதைத்து வருகிறது.

இந்த ஆண்டு சுட்டெண்ணின் ‘சட்டக் குறிகாட்டி’ (legal indicator) மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது, இது உலகம் முழுவதும் இதழியல் பெருகிய முறையில் குற்றமாக்கப்படுவதற்கான தெளிவான அறிகுறியாகும். 2025 மற்றும் 2026 க்கு இடையில் 180 நாடுகளில் 110 நாடுகளில் (60% க்கும் அதிகமானவை) இந்தப் புள்ளி விபரங்கள் மோசமடைந்துள்ளன.

குறிப்பாக இந்தியா (157 வது இடம்), எகிப்து (169 வது இடம்), இஸ்ரேல் (116 வது இடம்) மற்றும் ஜோர்ஜியா (135 வது இடம்) ஆகிய நாடுகளில் இந்நிலை காணப்படுகிறது. ஊடகச் சட்டங்களைத் தவிர்ப்பது மற்றும் அவசரகாலச் சட்டங்கள் மற்றும் பொதுச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இதழியலைக் குற்றமாக்குவது உலகளாவிய நிகழ்வாக மாறி வருகிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மதிப்பிடப்பட்ட 32 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 21 நாடுகளில் ஊடக சுதந்திரத்தின் நிலை “கடினமானது” அல்லது “மிகவும் பாரதூரமானது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது உலகின் மிகவும் அடக்குமுறை பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளதுடன், நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஊடகங்களுக்கு எதிரான சட்டரீதியான தாக்குதல்கள், குறிப்பாகத் தவறான குற்றச்சாட்டுகள் மற்றும் கடுமையான சட்டங்களே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மிகவும் கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், சீனா உள்ளிட்ட பிராந்திய எதேச்சதிகார ஆட்சிகளால் உருவாக்கப்பட்ட தணிக்கை மற்றும் பிரச்சார யுக்திகள் இப்போது அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் பரவி வருகின்றன.

நோர்வே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் எரித்திரியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link