இலங்கைக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
Share
தமிழகம் – தூத்துக்குடி, இனிகோ நகா் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 40 லட்சம் இந்தியா ரூபாய் மதிப்பிலான 1,400 கிலோ பீடி இலை மூட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகளை தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி கடற்பகுதி வழியாக இலங்கைக்கு உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக பீடி இலைகள், சிகரெட்டுகள், மருந்து பொருள்கள், வலி நிவாரண மாத்திரைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்து, பட்டாசு, வாசனை சோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் படகுகள் மூலம் தொடா்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தடுக்க கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், இனிகோ நகா் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (15)அதிகாலையில், அங்கே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த லொறி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை செய்தபோது, அதில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ பீடி இலை மூட்டைகள், 120,000 எண்ணிக்கையிலான சிகரெட்டுகள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
அந்தப் பொருள்களை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறியுடன் கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக லொறியின் சாரதியை கைது செய்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.


