Type to search

Editorial

செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட சர்வதேச சமூகம் நேரில் வர வேண்டும்

Share

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புக் கூடுகளின் எண்ணிக்கையை நினைக்கும்கால், எங்கள் தமிழினத்திற்கு நடந்த கொடுமை எத்தகைய தென்பதை அறிய முடியும்.

ஆம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 350 இற்கும் மேற்பட்ட மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல்துறைப் பேராசிரியர் சோமதேவாவின் பிரசன்னத்துடன் இடம்பெறுவது மன ஆறுதலைத் தருகிறது.

தவிர, குறித்த செம்மணி மனிதப் புதை குழியின் அகழ்விற்கான நிதியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஒதுக்கியிருப்பதும் ஆறுதலுக்குரியது.

ஆயினும் ஒரு சிறிய இடத்தில் இத்துணை மனித என்புக் கூடுகள் தனித்தும் கூட்டாகவும் குவிந்தும் கிடப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும் என நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை.

ஆம், அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சில உடலங்கள் இந்து மயானத்தில் புதைக்கப்படுகின்ற நிலைமைகள் உண்டு.

ஆனால் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து குவியலாக – கூட்டாக என்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன எனும் போது இஃது தமிழ் இனத்திற்கு நடந்த கொடூரத்தின் வெளிப்பாடாகும்.

எனினும் செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படும் மனித என்புக்கூடுகள் தொடர்பில் எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இப்போது அமைதி காப்பதுதான் ஏனென்று தெரியவில்லை.

அதிலும் செம்மணி மனிதப் புதைகுழியைக் காரணம் காட்டி, செம்மணியின் நுழைவாயிலுக்கு வடக்குத் திசையாக அமையவிருந்த சங்கிலிய மன்னனின் மாதிரி அரண்மனையைத் தடுப்பதில் தீவிரமாக இருந்தவர்கள் – மாதிரி அரண்மனை அமைய இருக்கும் இடத்திலும் மனிதப் புதைகுழி இருக்கலாமென்று ஊகம் வெளியிட்டவர்கள், இப்போது 350 எலும்புக் கூடுகளைத் தாண்டிய போதும் இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காப்பது எதற்காக?

ஆக, நல்லூர் இராசதானியின் கடைசித் தமிழ் மன்னன் சங்கிலியனின் பெயரால் ஓர் அரண்மனை அமைவதை விரும்பாத – அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்ற ஒரு கூட்டத்தின் கூப்பாடு தான் அதுவன்றி மற்றும்படி செம்மணி மனிதப் புதைகுழியின் கொடூரம் கண்டோ அல்லது எங்கள் இனத்திற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் இழைத்த துரோகத்தனம் கண்டோ மேற்குறிப்பிட்ட தரப்பினர் குரல் கொடுக்கவில்லை என்பது இப்போது தெளிவாகிறது.

பரவாயில்லை எங்கள் தமிழினம் விடிவு காண வேண்டிய சந்தர்ப்பங்கள் பல ஏற்பட்ட போதிலும் அந்த விடியலை ஏதோவொரு வகையில் இருளாக்கிய நம் அரசியல் தரப்புகளிடமும் சிவில் சமூகம் சார்ந்த அமைப்புகளிடமும் தமிழர் விடயத்தில் எப்போதும் சுயநலமும் பண நலமுமே மேலோங்கி இருந்தது.

ஆகையால் அதுபற்றி இவ்விடத்தில் கதைத்துக் காலம் போக்குவதை விட, தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து செம்மணி மனிதப் புதைகுழியின் கொடூரத்தை நேரில் வந்து பார்வையிடுமாறு அத்தனை சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமும் வெளிநாட்டுத் தூதுவர்களிடமும் கேட்க வேண்டும்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link