ரணில் மீதான வழக்கு ஒத்திவைப்பு!
Share
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது.
அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார். எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னதாக, சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இவ்விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவையும் இந்த வழக்கில் ஒரு சந்தேகநபராகப் பெயரிடுவதா என்பது குறித்து தற்போது சட்ட ரீதியாக ஆராயப்பட்டு வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதவான், இந்த வழக்கின் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அடுத்த வழக்குத் தவணையின் போது விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டார்.
இதன்படி, வழக்கு விசாரணை ஜூலை 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


