பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கல் மீண்டும் பழைய நிலைக்கு
Share
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டதன் பின்னர், அனைத்து மாணவர் பதிவுப் பட்டியல்களையும் 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, 2026 செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான குறிப்பிட்ட திகதிகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இம்முறை 2025/2026 கல்வியாண்டிற்காக இரண்டு புதிய பட்டப் பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ருஹுணு பல்கலைக்கழகத்தில் ‘புவியியல் தகவல் அமைப்பு’ (Geographic Information Systems) பாடநெறிக்காக 50 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ‘இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல்’ (Electronic and Intelligent Systems Engineering) பாடநெறிக்காக 50 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281,810 ஆகும். அவர்களில் 176,538 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அந்த மாணவர்களில், இம்முறை அரச பல்கலைக்கழகங்களுக்கு 42,937 மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், முதற்பட்டப் பாடநெறிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை இம்முறை அதிகரிக்காவிட்டாலும், மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி, பயனுள்ள மற்றும் தரமான கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


