பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டம்!
Share
எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (19) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த புதிய சட்டமூலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இது பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவே கொண்டு வரப்படுகிறதே தவிர, தனிநபர்களையோ அல்லது வேறு தரப்பினரையோ ஒடுக்குவதற்காக அல்ல என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தினார்.
“அக்காலப்பகுதியில் நிலவிய அரசியல் சூழல், அந்த நிறுவனங்களை இயக்கிய விதம் ஆகியவையே காணாமல் ஆக்கப்படார் தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை. கடந்த அரசாங்கங்களுக்கு அரசியல் ரீதியான தேவை இருந்திருந்தால் இவற்றைச் செய்திருக்க முடியும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீடிக்கின்றன என்றால், கடந்த அரசாங்கங்களுக்கு இந்த விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வரும் தேவை இருந்திருக்கவில்லை. முப்பது வருட யுத்தத்தினால் வடக்கும் தெற்கும் தாராளமாக இரத்தமும் கண்ணீரும் சிந்தியுள்ளன. மீண்டும் அப்படியானதொரு நிலைமை ஏற்படக்கூடாது.
தற்போது வடக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இனிமேலும் தமிழ் மக்கள் தங்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நினைப்பதற்கு இடமளிக்க முடியாது. வட பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். இனவாதம், மதவாதம், மதவெறி ஆகியவற்றால் நஞ்சூட்டப்பட்டுள்ள ஒரு நிலத்தை மீட்டெடுப்பது எளிதான காரியமல்ல. அதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.” என்றார்.


