துருக்கி பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் பலி, 13 பேர் காயம்!
Share
துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பாடசாலையில் 14 வயது மாணவன் நடத்திய கோரத் துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள ‘அய்சர் சாலிக் நடுநிலைப் பாடசாலையில் நேற்று (ஏப்ரல் 15) இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் 8-ஆம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மாணவன் ஒருவனே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியான தனது தந்தையின் 5 துப்பாக்கிகள் மற்றும் 7 தோட்டா பெட்டிகளை தனது புத்தகப்பையில் மறைத்து பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், 5-ஆம் வகுப்பு நடைபெறும் வகுப்பறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதில் 8 மாணவர்கள் மற்றும் கணித ஆசிரியை ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்தோடு காயமடைந்த 13 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்திய மாணவனும் சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன. இருப்பினும், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) சன்லியுர்பா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையிலும் முன்னாள் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் காயமடைந்திருந்தனர். அந்தச் சம்பவம் நடந்து 28 மணித்தியாலங்களுக்குள் இந்த இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது துருக்கி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என்றும், மாணவனின் தனிப்பட்ட விரக்தியால் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் துருக்கி உள்துறை அமைச்சர் முஸ்தபா சிஃப்ட்சி தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் அதிர்ச்சியூட்டும் காணொளிகளைப் பகிர அரசு தடை விதித்துள்ளது. மேலும், மாணவனின் தந்தை தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், உயர்மட்ட விசாரணைகளுக்கும் அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


