திருகோணமலை துறைமுகத்தில் ஒரே நேரத்தில் 3 கப்பல்கள் நங்கூரம்!
Share
திருகோணமலை துறைமுகத்தின் Ashroff Jetty அதன் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டு தங்களது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
மன்னார் காற்று மின் உற்பத்தி நிலையத்திற்காக 5 காற்று மின் கோபுரங்களை ஏற்றிவந்த ‘AAL BANGKOK’ கப்பல், Ashroff Jetty யின் ஒரு பகுதியில் தனது இறக்குதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
அதேவேளை, Ashroff Jettyயின் மற்றுமொரு பகுதியில் துபாயில் இருந்து மறு ஏற்றுமதிக்காக கொண்டுவரப்பட்ட 17,000 தொன் கட்டுமான இரும்பு கம்பிகளை இறக்கும் பணிகளில் ‘HAI LONG 1’ என்ற கப்பல் ஈடுபட்டுள்ளது.
அத்துடன், சிமெந்து நிறுவனத்திற்காக இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 55,000 தொன் நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் ‘UNIWELL’ கப்பல் மூலம் Ashroff Jettyயின் எஞ்சிய பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இவ்வாறு மூன்று கப்பல்கள் தங்களது செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை என துறைமுக அதிகாரசபையின் முகாமையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செயல்பாடுகள் மூலம் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


