ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!
Share
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியொன்றை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கில், கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (24) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 10ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் கட்டளையிட்டது.
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியொன்றைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் (FCID) முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் யோஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் லங்கா சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் 2.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


