ஒரே இடத்தில் பல வாகனங்களை மோதிய கார் – 13 பேர் வைத்தியசாலையில்!
Share
எஹெலியகொட நகரில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் எஹெலியகொட நகரின் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அந்த கார், வீதியில் நின்றிருந்த மற்றும் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் 01 மோட்டார் சைக்கிள், 03 முச்சக்கரவண்டிகள், 02 கார்கள் என மொத்தம் ஆறு வாகனங்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு எஹெலியகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற போது அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் நிலவியது.
விபத்துக்கான காரணம் சாரதியின் கவனக்குறைவா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறா என்பது குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


