Type to search

Headlines News World News

அறுவை சிகிச்சையின் தந்தையான சுஷ்ருதருக்கு ஸ்கொட்லாந்தில் சிலை

Share

அறுவை சிகிச்சையின் தந்தை என போற்றப்படும் இந்தியாவைச் சேர்ந்த மகரிஷி சுஷ்ருதரின் வெண்கல சிலை ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் திறந்து வைக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மகரிஷி சுஷ்ருதர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மருத்துவ அறிஞர். உலக மருத்துவ வரலாற்றில் இவர், அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இவர் எழுதிய மருத்துவ நுாலான ‘சுஷ்ருத சம்ஹிதா மூலம், மனித உடலை அறுவை சிகிச்சை வாயிலாக குணப்படுத்தலாம் என்பதை விளக்கியுள்ளார்.

184 அத்தியாயங்களை கொண்ட இந்நுாலில், 1,120 வகையான நோய்க்கு 700 மருத்துவ தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாயிலாக தயாரிக்கப்படும் மருந்துகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.

மகரிஷி சுஷ்ருதருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒருங்கிணைந்த பகுதியான ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில், வெண்கல சிலை சமீபத்தில் திறக்கப்பட்டது.

உலகின் மிக பழமைவாய்ந்ததும், புகழ்பெற்றதுமான ‘Royal College of Surgeons of Edinburgh in Scotland.’ என்ற மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இச்சிலையை, ஸ்கொட்லாந்துக்கான இந்திய துாதர் சித்தார்த் மாலிக் திறந்து வைத்தார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட பிரிட்டனின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரா செருவு தன் சொந்த செலவில் இச்சிலையை நிறுவியுள்ளார்.

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த சிற்பிகள், மகரிஷி சுஷ்ருதரின் 90 கிலோ சிலையை நேர்த்தியாக வடிவமைத்து எடின்பர்க் நகருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியாவின் தொன்மையான மருத்துவ பாரம்பரியத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள மகத்தான கௌரவமாக இது அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link