Type to search

Editorial

குகனோடும் ஐவரானோம் என்றுரைத்த இராமன் கதை

Share

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிறது நம் தமிழ் மொழி.

ஆம், நம் செயலுக்கான விளைவுகளையே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதனாலேயே “செய்வினை” என்ற சொற்பதம் நம் வாழ்வியலில் பேசுபடுபொரு ளாயிற்று.

உண்மை. செய்வினை என்பதன் பொருளை அறியாதவர்கள் செய்வினை என்பதை அதர்வண வேதத்துடன் தொடர்புபடுத்தினர்.

உண்மையில் செய்வினை என்பது நம் செயலுக்கானது.

அதாவது, நாம் எதைச் செய்தோமோ – செய்கின்றோமோ அதுவே செய்வினையாம்.

இதற்குத் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்லதோர் உதாரணம்.

ஆம், சசிகலாவினால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி எடுத்த எடுப்பிலேயே சசிகலாவை ஓரங்கட்டினார்.

தொடர்ந்து அவருடன் சேர்ந்து பயணித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல் வத்தை கட்சியில் இருந்து புறந்தள்ளினார். அதனோடு அவரின் அதிகார வெறி நிற்க வில்லை.

தொடர்ந்து அதிமுகவின் தூண் என்று சொல்லக்கூடிய செங்கோட்டையனை கட்சி யின் உறுப்புரிமையிலிருந்து நீக்கினார்.

இப்படியாக எடப்பாடி பழனிச்சாமியின் வெறியாட்டம் நடந்தபோது, கூடவே சட்டசபைத் தேர்தலும் வந்துற்றது.

தேர்தலுக்கு முன்னதாக எடப்பாடி பழனிச் சாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபன்னீர்ச்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர, செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இங்குதான் செங்கோட்டையனின் வருகை நடிகர் விஜய்க்கு ஒருபெரும் வரப்பிரசாதமாகிற்று.

சட்டசபைத் தேர்தலில் செங்கோட்டையனும் பன்னீர்ச்செல்வமும் வெற்றிபெற, எடப் பாடியாரின் திருகுதாளங்களுக்குத் துணை போன ஜெயக்குமார் தோல்வி கண்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சட்ட சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக உறுப்பினர்களில் கணிசமானவர்கள் சி.வி. சண்முகம் தலைமையில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

அதாவது, அதிமுகவில் இருந்து பிரிந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்க ஒருதரப்பு அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் முன்வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி அப்படியே அதிர்ந்து போனார்.

கண்ணீர் விட்டு அழாத குறையாக அவர் சட்டசபையில் உரையாற்றிய போதுதான் செய்வினைப் பயன் தெரிந்தது.

இங்குதான் வேடுவர் குலத்துக் குகனை – வானரத் தலைவனாகிய சுக்கிரீவனை அரக்கர் குலத்து விபீடணனை தன் உடன் பிறந்த சகோதரராகப் பிரகடனம் செய்த இராமபிரானின் காதையை எடப்பாடி போன்றவர்கள் கற்றறிய வேண்டும்.

ஆம், தலைவன் என்பான் பிரித்தாள்பவன் அல்ல. பிரிந்தவர்களையும் இணைத்து – சேர்த்து ஆள்பவன்தான் தலைவன்.

அந்தத் தலைவனுக்குரிய பண்பு இல்லாதவர்கள் குறுங்காலம் மகிழ்வாக இருந்தாலும் அவர்களின் இறுதிக்காலம் தாளாத் துன்பமேயாம்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link