யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியத் தூதுவரிடம்..
Share
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம்.
இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண வருகை என்பது பல வழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்னமும் தீர்க்கப்படாத ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் எங்கள் கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் ஈறாக, பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டுவதற்கு இந்தியாவின் ஆசியும் ஆதரவும் மிகவும் அவசியமானது.
அதிலும் குறிப்பாக, தற்போது யாழ்ப்பாணத்தில் பேசுபொருளாக இருக்கின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் தொடர்பில் ஒரு சரியான தீர்மானத்தை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்ற தார்மீகப் பொறுப்பும் இந்திய மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கு உண்டு.
அந்தவகையில் யாழ்ப்பாண மக்களுக்கு இந்திய மத்திய அரசு அமைத்துத் தந்த திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் பொருட்டு யாழ்ப்பாண மக்கள் மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அதேநேரம், யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை சுதந்திரமாக இயக்குகின்ற அதிகாரம் யாழ்ப்பாண மக்களிடமே இருக்க வேண்டும்.
ஆம், யாழ்ப்பாண மக்களுக்காக யாழ்ப்பாண மண்ணில் இந்தியா அமைத்துத் தந்த பண்பாட்டு மையத்தை – அதன் நிர்வாகத்தை பௌத்தசாசன அமைச்சிடம் ஒப்படைப்ப தென்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.
எனவே, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கான ஆளுகைச் சபை யொன்றை யாழ்ப்பாண மக்களைக் கொண்டு அமைத்து, அந்த ஆளுகைச் சபையூடாக பண்பாட்டு மையத்தை இயக்குவதுதான் நியாயத்துவமானது.
அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய சமயத் தலைவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தின் பிரதிநிதி மற்றும் யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளர் இன்னும் தகைசார் பேராசியர்களைக் கொண்ட ஓர் ஆளுகைச்சபையை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமித்து அச் சபையினூடாக திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை இயக்குவதே பொருத்துடையது.
எனவே இதற்கான ஏற்பாட்டை இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற இந் தியத் தூதுவர் செய்துதர வேண்டும் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை.
எங்களின் இந்தக் கோரிக்கையை இந்தியத் தூதுவர் நடுநிலை நின்று பரிசீலிப்பார் என்பதில் எமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
மேலும் இது விடயத்தில் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறுமாயின், இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய பிரித்தானியா எங்ஙனம் இலங்கைத் தமிழ் மக்க ளைப் பற்றி சிந்திக்காமல் விட்டதன் விபரீதங்களை இன்றுவரை அனுபவிக்கின்ற தமிழ் மக்களுக்கு இந்தியாவும் இன்னொரு சிக்கலை தானமாகத் தந்துவிடலாகாது.
வாலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


