மகோற்சவ நிறைவிலேயே மகாயாக கும்ப அபிஷேகம்
Share
சைவாலய அமைப்பு முறைகளை மத பேதம் கடந்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆம், ஆகமப்படி அமையப்பெற்ற ஒரு சைவாலயத்தை நாம் அவதானித்தால், அங்கு மூல மூர்த்தியும் பரிவார மூர்த்திகளும் பிரதிர்டை செய்யப்பட்டிருக்கும்.
தவிர, ஆலய பூஜையில் ஒழுங்கு முறைமை கட்டாயமாகப் பின்பற்றப்படும்.
அதாவது குறித்த ஆலயம் சிவன் கோயிலாக இருந்தாலும் அங்கும் பிள்ளையாருக்கே முதலில் பூசை இடம்பெற வேண்டும்.
இது போல ஆலய மகோற்சவம் ஆரம்பித்து விட்டால், அட்டதிக்குப் பாலகர்கள் முதல் காவல் தெய்வமாகிய வைரவர் மற்றும் இறைவன் தரும் அருளை நம்மிடம் சேர்க்கின்ற சண்டேஷ்வரர் என அனைவரும் ஏதோவொரு வகையில் வழிபடப் பெறுவர்.
இதை நாம் கூறுவதற்குக் காரணம் அவரவர், அவரவர் இடத்தில் பெறுமதியானவர்கள்.
தவிர, அவரவர் தத்தம் கடமைகளைச் செய்யும் அதிகாரத்தை உடையவர்கள்.
எனவே அவர், இவர் என்ற ஏற்றத்தாழ்வின்றி அவரவர் நிலைகளுக்கேற்ப உரிய மதிப்பும் கௌரவமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது நம் வைசசமயம் உணர்த்தும் மிகச் சிறந்த முகாமைத்துவக் கருத்தாகும் என்பதோடு இஃது ஒரு புறமிருக்க,
சைவாலய மகோற்சவத்தில் மகா யாகமும் யாகசாலையில் உள்ள மகா கும்பமும் மிகவும் முக்கியமானவை.
மகோற்சவத்தில் நாள்தோறும் நமஹ அபிஷேகம் நடைபெற்றாலும் யாகசாலையில் உள்ள மகாகும்பம் திருவிழாவின் இறுதி நாளில் மூலமூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அதாவது பிரதானமான மகா கும்பத்தை முதலில் அபிஷேகம் செய்வது முறையன்று. இஃது எதற்கும் பொருந்தக் கூடாது.
உதாரணத்திற்கு நம் நாட்டில் முன்பு ஆட்சி பீடத்தில் இருந்த முக்கிய கயவர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதில் ஊழல் குற்றச்சாட்டு முதன்மை பெறுகிறது. கூடவே, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் மேலும் கைதுகள் இடம்பெறவுள்ளன.
அதிலும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில்
ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதன் அடுத்த கட்டமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் கைது செய்யப்படுவார் என்பது நிறுதிட்டமான உண்மை.
இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது.
அதாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கைது செய்யப்படுவாரா? என்பது தான் அந்தக் கேள்வி.
இதற்கான பதிலையே நாம் சைவ ஆலயத்துடன் ஒப்பிட்டு மேலே குறித்துரைத்தோம்.
ஆம், மூலமூர்த்திக்கான மகா கும்பாபிஷேக அபிஷேகம் இறுதியாகத்தான் நடக்கும். நடக்க வேண்டும்.
ஏனென்றால் பரிவாரங்களுக்கு அபிஷேகம் செய்து அவர்களை உரிய இடத்தில் வைத்த பின்னர், எந்தச் சலசலப்பும் இல்லாத நிலையில் இறுதியாக மூலமூர்த்திக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கும்.
அது நடக்கும் போது ஒரு நல்ல திருவிழாவைக் கண்டு களித்த திருப்தி பக்தர்களுக்கு (பொதுமக்கள்) ஏற்படும்.
இப்போது நம் நாட்டில் ஒருபெரும் திருவிழா நடைபெறுகிறது – அதைப் பொறுத்திருந்து பார்ப்பது தான் நம் கடமையாகிறது.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்


