நகர அபிவிருத்திக்கு முன்னதான விழிப்புணர்வு
Share
நாடு முழுமையிலும் பத்து நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அநுர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களின் அபிவிருத்தி யும் உள்ளடங்கியுள்ளன.
ஆம், நகர அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது.
தவிர, நகர அபிவிருத்தி ஏற்படுகின்ற போது அந்த அபிவிருத்தியின் பேண்தகு நிலைக்கு மக்களைத் தயார்ப்படுத்துவதும் மிகவும் கட்டாயமானது.
இல்லையேல் குறித்த அபிவிருத்தி என்பது பணச் செலவாக இருக்குமேயன்றி மற்றும்படி அந்த அபிவிருத்தியால் அழகான நகரமோ அன்றி சுத்தத்தைப் பேணுகின்ற மனநிலையோ ஏற்படமாட்டாது.
உண்மையைக் கூறப்போனால், எங்கள் வடபகுதியில் ஏற்பட்ட அபிவிருத்தி என்பது அரச நிதியைச் செலவிடுகின்ற வேலைத்திட்ட மாக இருக்கின்றதே தவிர, குறித்த அபிவிருத்தியானது மக்களின் அபிப்பிராயங்களை உள்வாங்கியதாகவோ அல்லது மக்களின் வகிபங்கை பெற்றுக் கொண்டதாகவோ இல்லை.
அதாவது அபிவிருத்தி வேலைகள் ஒருபுறம் நடந்தாலும் அது தொடர்பில் எதுவும் அறியாதவர்களாக மக்கள் உள்ளனர்.
இதன் காரணமாக, கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தன்னிலை இழந்து போயுள்ளன. இதற்குப் பல உதாரணங் களைக் கூறமுடியும்.
ஆம், மிகவும் பெறுமதியுடன் பேணிப்பாது காக்கப்பட வேண்டிய யாழ்ப்பாணத்து காபற் வீதிகள் கண்டபாட்டில் வெட்டப்பட்டு குடிநீர்க் குழாய்கள்பொருத்தப்பட்டுள்ளன.
அவ்வாறு வீதிகளை வெட்டி குடிநீர்க் குழாய்களைப் பொருத்திய பின்னர், வெட்டப்பட்ட வீதிகளைச் செப்பனிடும்போது எந்தவிதமான தொழில்நுட்பமுறைகளும் பின்பற்றப்படாமல் துறைசார்ந்தவர்களின் ஆலோசனை பெறப்படாமல் – இறந்த நாயைப் புதைப்பதுபோல ஏற்ற இறக்கமாக வெட்டப்பட்ட விதிகள் மூடப்பட்டுள்ளன.
உண்மையில் காபற் வீதி அமைக்கும் பணிகள் இடம்பெற்றபோது, குறித்த ஒப்பந்த நிறுவனங்கள் எத்துணை நுட்பமாக அதனைச் செய்து முடித்து அழகான காபற் விதியை நம்மிடம் ஒப்படைத்தன.
ஆனால், குடிநீர் விநியோகத்துக்கான குழாய்களை பொருத்தியவர்கள் குரங்கின் கைப் பூமாலை போல அந்த வீதிகளை ஆக்கியுள்ளனர்.
இதுபோல கோடிக்கணக்கான பணத்தை ஒரு தனிநபர் செலவிட்டு அபிவிருத்தி செய்து கொடுத்த யாழ்ப்பாணம் ஆரியகுளம் இப்போது எப்படி இருக்கிறது?
ஆக, நகர அபிவிருத்தியைச் செய்வதாயின் முதலில் பொதுமக்கள், வர்த்தகர்கள், வீதி மற்றும் நீர் வழங்கல் பிரிவினர், உள்ளூராட்சி சபை, மின்சார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் என எந்தெந்த நிறுவனங்கள் நகர அபிவிருத்தியை பேணுவதில் தொடர்புபட்டனவோ அவற்றுடன் கலந்துரையாடி,
அவைகளின் உறுதிமொழிகளையும் உத்தர வாதங்களையும் பெற்றுக் கொண்ட பின்னரே நகர அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் அது நிலைத்த அபிவிருத்தியாக மக்களால் அனுபவிக்கப்படும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


