தீவகத்தில் வாழும் மக்களுக்கு இழைக்கப்பட்ட பெருந் துரோகம்
Share
மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதற்கான சாத்தியம் இல்லை என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் கூறியுள்ளார்.
அவரின் இந்த அறிவிப்பு சர்வதேச மைதானம் மண்டைதீவில் அமைவதை ஐயம் தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார்.
என்ன செய்ய முடியும். தீவகத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையப் பெற்றாலாவது, தீவகத்தில் வாழ்கின்ற மக்களின் பொருளாதாரம், கல்வி, போக்குவரத்து, சுய தொழில் முயற்சிகள் விருத்தியடையும் என நம்பப்பட்டது.
ஆனால் அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்டது போல அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் சாத்தியம் இல்லை என்ற தகவல்கள் ஏலவே அரச தரப்புகள் ஊடாக வெளிவந்திருந்தன.
ஏதோ! தெரியாத்தனமாக மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது எனக் கூறி விடடோம். அதை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் திண்டாடிய தரப்புகள் இதற்கு உரியவர்கள் யார் என ஆராய்ந்தது.
அந்தோ! பறவைகள், வனவிலங்குகள், கால்நடைகள், கண்டல் தாவரங்கள், மேய்ச்சல் தரவைகள், மழைநீர் தேங்கும் இடங்கள், சுற்றுச் சூழல்கள் என இவை யாவும் பாதிக்கப்படும் எனக் கூறக்கூடிய தரப்புகளை அவர்கள் இனங்கண்டு வாலாயப்படுத்தினர்.
பிறகென்ன …… முறையே மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமையவுள்ள பிரதேசம் பறவைகள் வந்து போகும் இடங்கள், மாடுகளின் மேய்ச்சல் தரவைகள், கடல் வளத்திற்கும் பாதுகாப்பான இடங்கள், இந்த இடத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எப்படி அமைக்க முடியும் என்று அவர்கள் கூப்பாடு போட, அதனைச் சாட்டாகக் கொண்ட அரசாங்கம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதை மெல்ல மெல்ல கைவிட்டு விலகிக் கொண்டது.
என் செய்வோம் தீவகத்தில் வாழ்கின்ற மக்களின் அன்றாட சீவனோபாய பிரச்சினைகள் பற்றி எதுவும் அறியாதவர்கள் – இலங்கையின் கல்வி வலயங்களில் கல்வி அடைவு மட்டத்தில் கடைசி இடமாக தீவக வலயம் இருப்பது பற்றி இம்மியும் சிந்திக்காதவர்கள் – அங்கு கற்கின்ற மாணவர்களின் எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர்கள் – தங்கள் பிள்ளைகள் வெளி நாடுகளில் வசதி வாய்ப்புடன் வாழ வைத்துக் கொண்டு தங்களின் பொழுதுபோக்கிற்காக ஏழைப் பிள்ளைகளின் வயிற்றில் அடிக்கின்ற இந்த ஈனத்தனத்தை என்னவென்று சொல்வது.
யாரிடம் முறையிடுவது அந்தோ! கொடுமையிலும் கொடுமை.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


