இப்போதும் இனவாதம் தமிழ்த் தரப்புக்கேயாம்.
Share
“இனவாதம்” என்பது இலங்கையில் இருக்கும்வரை அமைதியின்மையும் இருந்தேயாகும்.
இங்கு இனவாதம் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழர் குறித்தே பிரயோகித்தனர்.
அதாவது தமிழர்கள் இனவாதம் பேசுவதைத் தடுப்பதுதான் சிங்கள ஆட்சியாளர்களின் நிலைப்பாடாக இருந்தது.
ஆம், இந்த நாட்டில் தமிழ் மக்கள் சிறு பான்மையினர். எனவே அவர்கள் சிங்கள மக்களுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்பது பேரினவாதிகளின் நிலைப்பாடாயிற்று.
இந்த நிலைப்பாட்டின் கீழ் தமிழ் மக்களை வஞ்சிப்பதற்கும் அவர்களைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்வதற்குமான ஏற் பாடுகள் உருவாக்கப்பட்டன.
அதேநேரம் சிங்களத் தரப்புகள் தமிழ் மக்களுக்கு எதிராகக் கதைப்பதோ அன்றி தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை கட்டவிழ்த்து தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களை ஏற்படுத்துவதோ இனவாதமாகப் பார்க்கப்படாமல் அஃது தேசியப் பற்றாக – தேசிய உணர்வாகக் கருதப்பட்டது.
இவ்வாறு இனவாதம் என்பது தமிழர்களுக்குரியதாகவும் தமிழர்கள் அதை முற் றாகத் தவிர்க்க வேண்டும் என்பதிலுமே சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர்.
இவ்வாறான ஒருபக்கச்சார்பு காரணமாக சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளும் பௌத்த துறவிகளும் வீதிகளில் இறங்கி, தமிழ் மக்களுக்கு எதிராகக் கோசம் எழுப்பி னர்.
தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் காண்பித்தனர். அவர்களுக்கு இந்த நாடு சொந்தமில்லை என்ற கருத்தை சிங்கள மக்களிடையே பரவுகை செய்தனர்.
இருந்தும் இவை எதுவும் இனவாதமாகப்படவில்லை என்பதனூடு சிங்கள இனவாதி களை ஊக்குவிக்கின்ற நடவடிக்கைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் நடந்தாகின.
உண்மையில் இலங்கைத் திருநாட்டில் அமைதி – சமாதானம் – ஒற்றுமை ஏற்படுவ தாக இருந்தால், இனவாதத்தை இலங்கைப் பிரஜைகள் எவரும் தூண்டுவதாக – உருவாக்குவதாக – கருத்துரைப்பதாக அல்லது அது தொடர்பில் செயற்படுவதாகக் காணப்பட்டால் அது குற்றம் என்பதாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறான பிரகடனங்கள் இருந்திருக்குமாயின், உதய கம்மன்பில அண்மையில் வெளியிட்ட புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கும்.
ஆம், எத்தனையோ தமிழ்ப் புத்தகங்கள், சஞ்சிகைகள் இலங்கைக்குள் கொண்டுவரப் படுவதைத் தடை செய்த ஆட்சியாளர்கள் – தணிக்கை செய்த அரசுகள் – ஏன் குறித்த புத்தகங்கள் வைத்திருப்பதே தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்த இந்த நாடு, எதற்காக உதய கம்மன்பிலவின் புத்தகத்தை தடுக்கவில்லை – தடை செய்யவில்லை.
இந்தக் கேள்விக்குள் இப்போதும் இனவாதம் தமிழ் இனத்தின் பாற்பட்டதாக மட்டும் இருப்பது உறுதியாகிறது.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


