Type to search

Articles அபிமன்யு கட்டுரைகள்

துளிர் விடும் இனவாதம்

Share

மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எழுச்சிப் பிரவாகத்துடன் நடந்து முடிந்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இறுதி அத்தியாயம் என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்களின் உயிர்களை துச்சமென்றெண்ணி அவர்களைக் கொன்றொழித்து வெற்றி வாகை சூடியதாய் பால் சோற்றுக்குள் பகுத்தறிவைப் புதைத்தனர் சிங்கள பேரினவாத சக்திகள் சிலர்.

இலங்கையில் போர் முடிவுற்று 17 வருடங்கள் கடந்து விட்டன. அந்தப் 17 வருடங்க ளில் தமிழினத்தின் ஒரு கோரிக்கையேனும் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் நிறைவேற்றினரா எனின் அதற்கான பதில் கூகுள் தேடுபொறியான சட் ஜி.பி.ரியில் கூட இல்லை என்றாகும் முடிவு.

தமிழின அழிப்பை அரங்கேற்றியவர்கள் போர் வீரர்கள் என்றும், வெற்றி நாயகர்கள் என்றும் போற்றப்படுகின்றனரே தவிர, அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூற சர்வதேசத்துக்கே திராணி இல்லை என்பதே மெய்.

மே மாதம் தமிழினத்தின் வலி சுமந்த மாதம். அதை 17 வருடங்கள் இயற்கை தன் சீற் றத்தினூடே தெற்கிற்கு உணர்த்த முற்படுகிறது.

ஆயினும் தமிழினம் பட்ட வலிகளையும் வேதனைகளையும் இழப்புக்களையும் பெரும்பான்மையினர் உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டனர் என்பது வேதனையான உண்மை.

இதற்கு இனவாத அரசியில்வாதிகள் மூல காரணம் என்பதைத் தாண்டி இந்த நாட்டின் சிறு பான்மை மக்களையும் அவர்களின் வலிகளையும் உணர்ந்து கொள்ள வேண்டியது சிங்கள மக்களின் தலையாய கடமை.

இனவாதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தேவை அவர்களிடம் இருக்கின்றது. இதற்கப்பால் தமிழினத்துக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் சிங்கள மக்கள் உறுதியாக நின்றிருந்தால் தமிழினத்துக்கான நீதி ஒரு தசாப்பத்திற்கு முன் கிடைத்திருக்கும்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகள் என்றும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றொழித்ததற்கு அதனுடே நியாயம் கற்பிக்கும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த நாடு அமைதி பெறாது.

ஆம், மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.

இது போரில் இறந்த அப்பாவிப் பொது மக்களை அவர்களின் சொந்தங்கள் நினைவு கூரும் நாள்.

இதற்கு பயங்கரவாதச் சாயம் பூசும் செயல்களில் இனவாதிகள் சிலர் இன்று வரை ஈடுபடுகின்றனர் என்பது வேதனையானது.

தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் இனவாதத்தைக் கக்குவதில் முதலிடத்தில் இருப்பவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

இவர் வடக்கு கிழக்கு தொடர்பில் எதைப் பேசினாலும் அதில் இனவாதம் இருந்தே தீரும்.

மே-18 முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு புலிகளை நினைவு கூரும் நிகழ்வென்றும் புலிகளை நினைவு கூற இந்த அரசாங்கம் அனுமதித்திருக்கிறது என்றும் போரை வென்ற இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது எனவும் சிங்கள மக்களைக் குழப்பும் வகையில் பேசியிருக்கிறார் வீரசேகர.

இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆம் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு கூடிய இளைஞர் குழு ஒன்று குறித்த நினைவேந்தலைக் குழப்பும் வகையில் நடந்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இறந்த அப்பாவி உயிர்களுக்கு மேற்கொள்ளும் நினைவேந்தலை பயங்கரவாதிகளை நினைவேந்துவதாகக் கூச்சல் போட்ட அவ் இளைஞர்கள், தேசியத் தலைவர் பிரபாகர னின் புகைப்படத்தை எரியூட்டியதுடன் அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கைகளையும் மேற்கொண்டிருந்தமை தமிழ் மக்கள் மனங்களை காயப்படுத்தியிருக்கின்றது.

இறந்த தம் இனத்தை நினைவேந்தக்கூட அனுமதி மறுக்கும் ஓர் இளம் பெரும்பான்மை சமூகம் உருவாகின்றது என்பதை நினைக்கும் போது மனம் ரணமாகிறது.

நிலை இவ்வாறு இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ “இலங்கையில் நடைபெற்ற போர் விதி மீறல்களுக்கு சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை.

மூன்று தசாப்த போரை நிறைவுக்குக் கொண்டுவந்த வீரமிகு இராணுவம் எம்மிடம் இருக்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பலர் இந்த நாட்டில் இருக்கலாம். அவர்களுக்கு உள்நாட்டிலேயே தீர்வைப் பெற்றுத்தர முடியுமே தவிர சர்வதேச விசாரணை எனும் பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்திருக்கின்றார்.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது சிங்களப் பகுதிகளை விட வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளிலேயே அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.

சஜித் பிரேமதாஸ ஒரு நடுநிலை அரசியல்வாதி என்றும் எமக்கான தீர்வை அவர் பெற்றுத் தருவார் என்றும் தமிழ் மக்கள் பலமாக நம்பியிருந்தனர்.

அந்த நன்றிக் கடனைக் கூட மறந்து சஜித் பிரேமதாஸ இவ்வாறு பேசியிருப்பது அவரும் அதே இனவாதம் என்கின்ற குட்டையில் ஊறிய மட்டையோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆக, 17 வருடங்களல்ல 17 ஆயிரம் வருட ங்கள் கடந்தாலும் பெரும்பான்மை இனவாத அரசியல்வாதிகளினால் தமிழினத்துக்கான நீதியைப் பெற்றுத்தர முடியாது என்பதை அவர்களின் நடை-உடை-பாவனை என்பன தெட்டத் தெளிவாகக் காட்டி நிற்கிறது.

அபிமன்யு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link