Type to search

Articles விகடன் பிளஸ்

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் பிளவைத் தவிர்க்க போராடும் திருமா!

Share

‘ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைப்பவர் கரை சேர்வதில்லை’ என்பது பிரபலமான பழமொழி. அது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போயிருக்கிறது.

“தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” என்று அறிவித்திருப்பவர், “தி.மு.க கூட்டணியில் தான் இன்றும் தொடர்கிறோம்” என்ற குழப்பகர நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் சீமான், தனது தேர்தல் பரப்புரையில் அடிக்கடி சொன்ன உவமைபோல, ரோட்டுக்கு இந்தப் பக்கமும் இல்லாமல், அந்தப் பக்கமும் இல்லாமல் நடுவில் நிற்கிறார் திருமா.

“தன்னுடைய தற்போதைய நிலைப்பாட் டில் திருமா தொடர்ந்தால், கட்சியிலிருந்து வெளியேறி தி.மு.க-விலும் த.வெ.க-விலும் ஐக்கியமாகப் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் தயாராகிவிட்டார்கள். பிளவை நோக்கி நகர்கிறது வி.சி.க. அதைத் தவிர்க்க, கடுமையாகவே போராடுகிறார் திருமா”

“அதிகாரத்தில் பங்கு கோஷம் என்னாச்சு?” பொருமலில் நிர்வாகிகள்!

2026 சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அப்படியான சூழலில், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு ஐந்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், தலா இரண்டு இடங்களில் வெற்றிபெற்ற சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ஐ.யூ.எம்.எல் கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்களது ஆதரவை அளித்தன.

முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளைத் தருவதற்கு முன்வந்திருக்கிறது த.வெ.க தலைமை.

அதிகாரப் பகிர்வை விரும்பாததால், நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக இடதுசாரிகள் அறிவித்துவிட்டனர். ஆனால், கட்சி தொடங்கிய நாள் முதலே, ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கோரிக்கையை வலியுறுத்திவந்த வி.சி.க தலைவர் திருமாவளவன், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கும் கதையாக ‘நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்’ என்று அறிவித்திருப்பது வி.சி.க-வுக்குள் பெரும் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது.’

கடந்த மே 10ஆம் திகதி,டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட, ‘அமைச்சரவையில் பங்கெடுப்பது குறித்து உயர்நிலைக்குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்போம்’ என்றார். ‘த.வெ.க அமைச்சரவையில் பங்கெடுக்கப் போகிறோம்’ என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்த போது, விஜய்க்கு ஆதரவு தெரிவித்த தலைவர், அமைச்சரவையில் பங்கெடுக்காமல் பின்வாங்கி விட்டார்.

ஆற்றில் ஒரு கால்… சேற்றில் ஒரு கால்!

‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா…? என்ற கேள்வி எழுந்தபோதெல்லாம், ‘அதற்கான காலம் கனியவில்லை’ எனச் சொல்லிவந்த தலைவர், காலம் கனிந்திருக்கும் இந்தச் சூழலிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள மறுப்பதுதான் ஏன் என்று புரியவில்லை.

அதற்கெல்லாம் மேலாக, த.வெ.க-வுக்கு ஆதரவு அளித்துக்கொண்டே தி.மு.க கூட்டணியிலும் தொடர்வது என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாடு என்றும் எங்களுக்கு விளங்கவில்லை.

தி.மு.கவுடன் நின்று எதிர்க்கட்சி அரசியலை முன்னெடுக்க வேண்டும் அல்லது த.வெ.க அமைச்சரவையில் பங்கெடுத்து, ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும்.

இரண்டும் இல்லாமல், ‘தி.மு.க ஒரு தீய சக்தி’ என விமர்சிக்கும் த.வெ.க ஆட்சிக்கு ஆதரவளித்துவிட்டு, ‘நாங்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்போம்’ என்று பேசுவதால், வி.சி.க-வின் ரெண்டுங்கெட்டான் நிலைப்பாடு கேலிக்கூத்தாகிவிட்டது.

சமூகத்தில் நாளைக்கே ஏதாவது பிரச்சினை வெடித்தால், எதிர்க்கட்சியாக த.வெ.க அரசை விமர்சிப்பாரா அல்லது ஆளும் தரப்புக்கு ஆதரவு எனச் சமாளிப்பாரா…

‘ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்’ என்ற குழப்பத்தில் இருக்கிறார் திருமா.

அவரது செயற்பாடுகளால் கட்சிக்குத்தான் பின்னடைவு உருவாகியிருக்கிறது” என்றனர் ஆதங்கத்துடன்.

“வன்னி அரசு அமைச்சராகக் கூடாது!”

நம்மிடம் பேசிய வி.சி.கவின் முக்கியத் தலைவர்கள் சிலர், “இந்த அளவுக்குக் கட்சிக்குள் குழப்பம் உருவானதற்கு, சில நிர்வாகிகளும் காரணம். ‘த.வெ.க அமைச்சரவையில் பங்கெடுப்பதாக இருந்தால், யாருக்கு அமைச்சர் பதவியைக் கொடுப்பது?’ என்ற விவாதம் கட்சிக்குள் ஓடுகிறது.

கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசுவை அமைச்சராக்க, கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கே விருப்பமில்லை.

தி.மு.க-வில் ஷாநவாஸ்… த.வெ.க-வில் பாபு… பிளவைத் தவிர்க்கப்போராடும் திருமா!

அவர்கள் சொல்வது உண்மைதான். வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட சொதப்பல்கள், தேர்தலுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வை கோட்டைவிட்டது உள்ளிட்ட விவகாரங்களால், வி.சி.க நிர்வாகிகள் பலரும் நொந்துபோயிருக்கின்றனர்.

கட்சித்தாவும் மனநிலைக்கும் அவர்கள் வந்துவிட்டனர்.

அது குறித்து நம்மிடம் பேசிய வி.சி.க-வின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சிலர், “தன்னுடன் நீண்டகாலமாகப் பயணிக்கும் வன்னி அரசுவை அமைச்சராக்கவே தயங்குகிறார் திருமா. வன்னி அரசுவே வாய்வி ட்டுக் கேட்டும்கூட பதில் தர மறுக்கிறார். ‘அவருக்கே இந்த நிலைமை என்றால்,

நமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது…’ என்ற மனநிலை கட்சி நிர்வாகிகளிடம் ஏற்பட்டுவிட்டது.

இதையடுத்தே, துணிந்து ஒரு முடிவெடுக்கப் பலரும் தயாராகிவிட்டனர்.

சீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்த ஆ@ர் ஷாநவாஸீக்கு, விஜய் ஆதரவு

நிலைப்பாட்டில் துளியும் விருப்பமில்லை.

தி.மு.கவின் அழைப்பை ஏற்று அந்தக் கட்சியில் இணைவதற்குத் தயாராகிவிட்டார்

ஷாநவாஸ். அவரோடு சேர்ந்து, வி.சி.க-வில் இருக்கும் இஸ்லாமிய நிர்வாகிகள் பலரும் தி.மு.க-வில் இணையத் திட்டமிடுகிறார்கள்.

அதேபோல, ‘த.வெ.க அமைச்சரவையில் பங்குபெற வேண்டும்’ என்பதில் கட்சியின் 70 சதவிகித மாவட்டச் செயலாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அவர்களின் விருப்பத்தை திருமாவளவன் புறந்தள்ளினால், கணிசமான மா.செ-க்கள் த.வெ.க-வுக்குச் செல்லவும் தயங்க மாட்டார்கள். முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு தலைமையில் ஒரு குழுவும், கட்சியின் முக்கிய வழக்கறிஞர்களான பார்வேந்தன், ரஜினிகாந்த் போன்றவர்கள் தலைமையில் வேறொரு குழுவும் பனையூர் பக்கம் செல்ல தயாராக இருக்கின்றன.

தன் கண்முன்பாகவே கட்சிக்குள் பிளவு உருவாவதால், கட்சியைக் காபந்து செய்ய முட்டி மோதுகிறார் திருமா.

ஆனால், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. நிலைமையைச் சமாளிக்க, ‘என் கட்சியிலிருந்து வருபவர்களை இணைத்துக்கொண்டால், அது சரியாக இருக்காது’ என த.வெ.க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம் பேசியிருப்பதாகவும், ‘உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுத்துத்தானே த.வெ.க-வை ஆதரித்தேன்… என் கட்சியினரை நீங்கள் சேர்ப்பது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்…’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமும் திருமா பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அப்படியே பேசியிருந்தாலும், இதெல்லாம் எந்த அளவுக்கு எடுபடும் எனத் தெரி யவில்லை” என்றனர்.

மொத்தத்தில், ‘த.வெ.க-வா… தி.மு.க-வா…’ என்ற முடிவை எடுத்தே ஆகவேண்டிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் திருமாவளவன். அவர் எந்தப் பக்கம் சாய்ந்தாலும் சரி, மறுபக்கத்தில் சாய அவரின் கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துவிட்டனர்.

வி.சி.க-வில் சில விக்கெட்டுகள் விழத் தயாராகின்றன. சிக்கலை எப்படிச் சரிக்கட்டப்போகிறார் திருமா.பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link