வியாசர் பதில்கள்
Share
1) பேரறிவாளன் சட்டத்தரணியாகிவிட்டார். இனி நிலை எப்படியிருக்கும்?
சேது- யாழ்ப்பாணம்
இந்தியப் பிரதமரைக் கொலை செய்த குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட பேரறிவாளன் அந்த நீதிமன்றப் படிகளில் ஒரு குற்றவாளியாக எத்தனை முறை ஏறி இறங்கியிருப்பார்.
இப்போது அதே படிகளில் சட்டத்தரணியாக கறுப்புச் சட்டை அணிந்து தன்னை நிரூபித்திருக்கிறார்.இங்கு வாழ்க்கைக்கான சிறந்த பாடம் ஒன்றும்இருக்கிறது.
ஆம், சிறைக்கூடங்கள் ஒரு மனிதனின் எண்ணம்,செயல்களை சிதைத்து விடாது என்பதே அது.
பேரறிவாளனின் ஒப்பற்ற முயற்சி இன்று அவரை சட்டத் தரணியாக்கி தான் குற்றவாளியாக தலைகுனிந்து நின்ற நீதிமன்றில் ஒரு சட்டத் தரணியாக தலை நிமிர்ந்து நிற்கச் செய்திருக்கிறது.
2) இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனரே?
விஜயகுமார்- யாழ்ப்பாணம்
நூறு விகிதம் உண்மை.ஆயினும் இந்திய மீனவர் அத்துமீறல் தொடர்பான அரசியலை தமிழக- ஈழத்து மீனவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அண்மையில் ஈழத்து மீனவரை தமிழக மீன வர்கள் சிறை பிடித்தனர் என்ற செய்தி,உண்மை எதுவென்று தெரியாமல் தீயாகப் பரவின.
இதில் வேடிக்கை என்னவெனில், ஈழத் தமிழ் மீனவரைத் தாக்கிய செயலை நாமல் ராஜபக் கண்டித்தமை தான்.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் உங்கள் தந்தையின் ஆட்சிக்காலத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட விடயம் உமக்குத் தெரியாது போனது வேடிக்கைக்குரியது.
3) எல்லாம் சிவமயம் என்பது அருகிப் போக எல்லாம் பணமயம் ஆகி விட்டதே?
மகாலட்சுமி- உரும்பிராய்
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வது என்பது சர்வசாதாரணமான விடயமன்று.அங்கு பெரும் கூட்டம் கூடும்.
சுருங்கச் சொன்னால் நல்லூர் தேர்த்திருவிழாவுக்குக் கூடும் சனத்தின் இருமடங்கு ஒவ்வொரு நாளும் கூடும்.
சாமி தரிசனத்துக்காக நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும்.
வெளிநாட்டவர்களுக்கு வி.ஐ.பி வரிசை அதிலும் சிறுதொகைப் பணம் சாமி தரிசன த்தை கணப்பொழுதாக்கிவிடும்.
சிவமயத்திற்கும் இப்போது பணமயம் தேவைப்படுகிறது.
4) பிக்குகளின் கைகளில் போதைப் பொருள் இது எப்படியிருக்கிறது?
தர்விந்- வதிரி
புத்தனின் புனித காவியைப் போர்த்திக் கொண்டு எவ்வளவு கொடூர புத்தியுடன் செயற்படுகிறார்கள்.
இலங்கையின் விமான நிலையங்களில் பெளத்த துறவிகளுக்கு சோதனை எதுவும் இல்லை என்பது எவ்வளவு அபத்தமானது.
110 கிலோ போதைப் பொருள் ஒரு முறையில் கைப்பற்றப்பட்டிருக்கின்றது எனின், இது வரைகாலம் எத்தனை ஆயிரம் கிலோ நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதோ?
இறைவனின் பெயரால் இவ்வாறு செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களின் தண்டனைகள் பகிரங்கப்படுத்துவது காலத்தின் தேவை.
5) நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டாலும் பாராளுமன்ற பெரும் பான்மை அரசியல் அபிலாசைகளில் தலையீடு செய்யுமா?
சுதன் -குப்பிழான்
பாராளுமன்றப் பெரும்பான்மை என்பது நிறைவேற்று அதிகாரத்திலும் மிக மோசமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிறுபான்மையினர் என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதற்கு பாராளு மன்றப் பெரும்பான்மை வழிவகுக்கின்றது.
சிறுபான்மை- பெரும்பான்மை என்கின்ற பேதம் மறந்து சிறுபான்மையினத்தவர் ஒருவர் இந்த நாட்டை ஆளும் நிலைவரவேண்டும். அப்போது தான் இந்த நாடு உய்யும்.
இந்த மாற்றத்துக்கு குறைந்தது ஐயாயிரம் வருடமாவது ஆகும்.
6) வியாசரே யாருக்காவது நீங்கள் துப்பாக்கி நீட்டியிருக்கிறீர்களா?
தமிழ்- யாழ்ப்பாணம்
சின்ன வயதில் கோவிலில் வாங்கிய தண்ணீர் துப்பாக்கிக்குள் தண்ணீரை நிறைத்து, மறைந்திருந்து தங்கை வரும்போது அவள் முகத்தில் அடித்து; அவள் அழுது கொண்டுபோய் அம்மாவிடம் போட்டுக் கொடுக்க அம்மா என்னைப் போட்டுப் புடித்த அனுபவம் இருக்கிறது.
இதற்காக இனி நான் பாராளுமன்றத் தேர்தலில் நின்று அதில் சென்று என்பாதுகா ப்பிற்கு ஒரு துப்பாக்கி வாங்கி. என்னுடன் வேலிச்சண்டை பிடிக்கும் பெண்ணுக்குச் “சுடுவன்” என்று காட்ட வேண்டுமா என்ன?
7) சமூக வலைத்தளங்களினூடாக நடைபெறும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க முடியாதா?
ராஜ்குமார்- மந்துவில்
சமூகத்தின் மூடத்தனக் கட்டுப்பாடுகளை உடைத்தல் என்ற புரட்சி இன்று சர்வ சாதா ரணமாக சமூக வலைத்தளங்களில் எமது அந்தரங்கங்களைப் பகிரும் களமாகிவிட்டது.
இதன் தாக்கமே இன்றைய நிலைக்குக் காரணம் எனலாம்.
தொழில்நுட்பம் என்பது நல்லவற்றிக்கான தாய் இருக்க வேண்டும். அதை நல்லதிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதைத் தீய செயலுக்குப் பயன்படுத்தினால் அது மனித குலத்தை அழித்து விடும் என்பதே உண்மை.
8) தையிட்டி விகாரைக் காணிகள் தொடர்பில் வியாசரின் கருத்தென்ன?
மாதேஷ்- தையிட்டி
மக்கள் காணியை மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் தார்மீக கடமை.
முற்றையும் திறந்து மரத்தடியில் இருந்து ஞானம் பெற்ற புத்த பெருமானின் பெயரில் அப்பாவிப் பொது மக்களின் காணிகளை அபகரிப்பதென்பது நல்ல தல்ல.
குறித்த விடயத்தை வைத்து அரசியல் செய்யும் தரப்பும் இக் கொடுமைத் தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


